தமிழகம் திரும்ப சிறப்பு விமானச் சேவைகள்

கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானச் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்புவோருக்காக இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நாள்தோறும் விமானச் சேவை வழங்கப்படுவதாக தமிழ் முரசிடம் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று தெரிவித்தது. இம்மாதம் 9ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும் இரண்டு விமானங்கள் செல்வதாக தூதரகம் கூறியது.

பயணங்களுக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என்று கூறிய தூதரக அதிகாரி, பயணம் செய்ய பதிவு செய்துகொள்பவர்களிடம் பயண நேரம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விமானங்களில் பயணம் செய்ய விரும்புவோர் https://www. hcisingapore.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.