ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர்

ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து அதற்கான அனுகூலங்களை அவர்களுக்குத் தராமல் பூசி மெழுகும் முதலாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனிநாடானதிலிருந்து இதுவரை கண்டிராத பொருளியல் நெருக்கடியை சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இவ்வாண்டு பொருளியல் 4லிருந்து 7 விழுக்காடு வரை சரிவு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் ஏறத்தாழ 100,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஊழியருக்குப் பதிலாக இன்னொருவரை வேலைக்கு எடுக்கும் திட்டத்தை முதலாளி கொண்டிருக்காமல், அந்த ஊழியரை வேலையைவிட்டு அனுப்பினால் அது ஆட்குறைப்பாகக் கருதப்படும் என்றார் அமைச்சர் டியோ.

“ஆட்குறைப்பு செய்யப்பட்டால் கிடைக்கவிருக்கும் அனுகூலங்கள் வேலை நியமன ஒப்பந்தத்தில் இடம்பெற்றதால் அதை நிறைவேற்றுவது முதலாளிகளின் கடமையாகும். ஆட்குறைப்பு என்று வகைப்படுத்தாமல் அனுகூலங்களைத் தராமல் இருக்க முதலாளிகள் அதை வேறொன்றாக வகைப்படுத்த முடியாது.

“ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து அதை வேறொன்றாக வகைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான வேலை ஆதரவுத் திட்டம் போன்ற அரசாங்க ஆதரவுகளையும் வேலை அனுமதிச் சீட்டு சலுகைகளையும் மீட்டுக்கொள்வது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை செய்யும்,” என்றார் அமைச்சர் டியோ.

ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படும்போதும் அவர்களது சம்பளம் குறைக்கப்படும்போதும் அவர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் டியோவின் உரை அமைந்திருந்தது.

இது ஒருபுறம் இருக்க, ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர் களுக்கு அதற்கான அனுகூலங்களைத் தர முதலாளிகள் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.

“முதலாளிகளுக்கு உண்மையில் நிதி நெருக்கடி இருந்தால் ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அனுகூலங்கள் தொடர்பாக கலந்துரையாடி மாற்றி அமைக்கலாம் என முத்தரப்புப் பங்காளித்துவம் இணங்கியுள்ளது. இத்தகைய வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகளில் வழக்கமான விதிமுறைகளை ஓரங்கட்ட வேண்டிவரும்.

“இருப்பினும், தங்களால் முடிந்த அளவுக்கு ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு முதலாளிகள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.

முதலாளிகள் அறிமுகப்படுத்தவிருக்கும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தமது அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

அவற்றைத் தமது அமைச்சும் நியாயமான வேலையிட அணுகுமுறைக்கான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பும் ஆராய்ந்து நியாயமற்ற சில அம்சங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட முதலாளிகளுடன் கலந்துரையாடும் என்றார் அமைச்சர் டியோ.

உதாரணத்துக்கு ஊழியர்களுக்கான சம்பளக் குறைப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் முதலாளிகளை அமைச்சு அழைத்து அதுகுறித்து பேசும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!