மின்னிலக்கத் துறையில் அதிக வேலைகள்

ஊழியர்கள் தங்கள் ஆற்றல்களை மேம்படுத்திக்கொண்டு, சவால்மிக்க புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ள வேளையில், மின்னிலக்கத் துறையில் சிங்கப்பூரர்களுக்கு 5,000க்கு மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க விற்பனை, தரவுப் பகுப்பாய்வு போன்ற துறைகளில் அந்த வேலைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் விவரித்தார்.

இந்த மின்னிலக்க ஊக்குவிப்பு முயற்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளும் பயனடையலாம் என்று குறிப்பிட்ட திரு ஈஸ்வரன், மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் மின் வர்த்தகத் தளங்களுக்கு $10,000 வரையிலான உதவித் தொகை புதியதொரு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றார்.

கொவிட்-19 பிரச்சினையால் விளைந்த பாதிப்புகளால் நாட்டின் பொருளியல் பாதிக்கப்பட்டிருந்தாலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சிறப்பாக இயங்கி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.