கிருமித்தொற்று தொடர்பு தடங்களை அறிய புதிய கருவி

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் மற்றொரு முயற்சியாக அணிந்துகொள்ளக்கூடிய கருவியை சிங்கப்பூர் தயாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரின் தடங்களை அறிய அக்கருவி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவார்ந்த தேச திட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று இதை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடப்பில் இருக்கும் ‘டிேரஸ்டுகெதர்’ செயலியிலுள்ள தொழில்நுட்பக் கோளாறு குறித்து மன்றத்தில் விளக்கிய போது புதிய கருவி
குறித்த தகவலை அவர் வெளியிட்டார்.

அரசாங்கம் தயாரித்து வெளியிட்ட அச்செயலி ஐஃபோன் போன்ற ஆப்பிள் நிறுவன சாதனங்களில் சரிவர செயல்படுவதுபோலத் தெரியவில்லை என்று கூறிய அமைச்சர், இதுபோன்ற காரணங்களால் ‘டிேரஸ்டுகெதர்’ செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் ஆக்கப்படாது என்றார்.

மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ‘டிேரஸ்டுகெதர்’ செயலியைச் சுமார் 1.5 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்தபோதிலும் மொத்த மக்கள் தொகையில் அது கிட்டத்தட்ட 25 விழுக்காடு என்றார் டாக்டர் விவியன்.

ஆண்ட்ராய்ட் ரக கைபேசிகளைப்போல் அல்லாமல் ஆப்பிள் நிறுவன சாதனங்கள், செயலியின் இயக்கத்தில் ப்ளூடூத் பயன்பாட்டைத் தடைசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே ஆப்பிள் நிறுவனத்துடன் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதுவரை அதில் முடிவு எட்டப்படவில்லை.