நியூயார்க் மாநிலம், பஃபளோ நகரில் கடந்த வியாழக்கிழமை 75 வயது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைத் தரையில் தள்ளிவிட்ட இரு போலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தரையில் விழுந்த அந்த முதியவருக்கு தலையில் கடுமையான ரத்தக் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலிசாரை எதிர்த்த அவர் தள்ளிவிடப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்கள் பரவியது. அந்த முதியவர் தள்ளிவிடப்பட்டதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் கண்டும் காணாமலும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அவ்விரு போலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த முதியவரைத் தாக்கியதாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை 32, 39 வயது மதிக்கத்தக்க அவ்விரு அதிகாரிகளும் நேற்று முன்தினம் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்துள்ள நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் அவர்களுக்கு எதிராக நியாயமாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

