நீண்டகாலகட்டத்தில் மனிதகுலம் எதிர்நோக்கும் மிக ஆபத்தான நெருக்கடியாக கொவிட்-19 கிருமித்தொற்று சூழல் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அது கடுமையான சவால்களைத் தந்தாலும் அதிலிருந்து மேலும் வலுவான, மேம்பட்ட சிங்கப்பூர் மீண்டு எழ முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
கொவிட்-19க்குப் பின் சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்த தேசிய ஒளிபரப்புத் தொடரில் நேற்று மக்கள் முன் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"அனைத்துலக வர்த்தகத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். பல தொழில்துறைகள் கொவிட்-19 கிருமித்தொற்று சூழலிலிருந்து முழுமையாக மீள முடியாமல் போகலாம். வேலைகள் பறிபோகும். அடுத்த சில ஆண்டுகள் நாம் அனைவருக்கும் இடையூறு மிகுந்ததாகவும் சிரமமாகவும் இருக்கும்," என்றார் அவர்.
"ஆனால், இந்தப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும் நான் உங்களிடம் கூறுகிறேன். பயப்படாதீர்கள், மனம் தளராதீர்கள்," என்று அவர் நம்பிக்கை ஊட்டினார்.
"கொவிட்-19 கிருமித்தொற்று ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும். எனவே சிங்கப்பூரர்கள் நீண்டகாலத்திற்கு அதனுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்," எனப் பிரதமர் லீ கூறினார்.
நாம் வாழும், வேலை செய்யும், விளையாடும் முறைகளை அனைவரும் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
"தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்குக் குறைந்தது ஓராண்டு அல்லது அதைவிட நீண்டகாலம் பிடிக்கலாம். காச நோய் போன்ற மற்ற ஆபத்தான தொற்றுநோய்களுடன் நாம் முன்பு வாழ்ந்ததைப் போன்று கொவிட்-19 கிருமித்தொற்றுடன் நீண்டகாலம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் சிங்கப்பூர் கண்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் லீ எடுத்துரைத்தார்.
சமூக அளவில் புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைச் சுட்டிய அவர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் நிலவரம் மேம்பட்டுள்ளதாகச் சொன்னார்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பும் கொவிட்-19 நிலவரத்துக்கு நன்கு ஈடுகொடுத்து வருகிறது. சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் பிரதமர் லீ சுட்டினார்.
இதன் விளைவாக, கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டத்திலிருந்து சிங்கப்பூரால் வெளிவர முடிந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், கிருமித்தொற்று பரிசோதனைகளும் தொடர்புகளின் தடங்களையும் கண்டறியும் பணிகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விரைவில் கண்டறிந்து, அவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலம் கிருமித்தொற்று குழுமங்கள் பெருகுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் விவரித்தார்.
"அனைத்தும் நன்றாக நடந்து, கிருமித்தொற்று நிலவரம் கட்டுக்குள் இருந்தால் நாம் மேலும் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, கூடிய விரைவில் அதிகமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவோம்," என்றார் திரு லீ.
இந்நிலையில், கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீண்டு இன்னும் வலுவான நிலையை அடைய மூன்று அம்சங்களை அவர் பட்டியலிட்டார்.
"முதலாவதாக, பல ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த பொருளியல் பலமும் அனைத்துலக ரீதியில் நிலவும் நற்பெயரும். அனைத்துலக வர்த்தகமும் முதலீடுகளும் குறைந்தாலும் அவை முற்றிலுமாக மறைந்துவிடாது.
"புதிய வாய்ப்புகள், வர்த்தகங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். நாம் இன்னும் கடினமாக, விவேகமாக உழைக்கவேண்டும்," என்றார் திரு லீ.
இரண்டாவது, நெருக்கடியைச் சமாளிக்க சிங்கப்பூர் முன்கூட்டியே அதன் திறன்களை வலுவாக்கி உருமாற்றத் தொடங்கிவிட்டது. ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது, புத்தாக்கம் மற்றும் ஆய்வு மேம்பாட்டுத் திறன்களை வளர்ப்பது போன்றவற்றை அவர் சுட்டினார்.
மூன்றாவதாக, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறிய திரு லீ, சிங்கப்பூரர்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது புதிய வேலைகளைத் தேடுவதே அரசின் தலையாய முன்னுரிமை என்றார். இதற்காக உருவாக்கப்பட்ட பலதரப்பட்ட திட்டங்களையும் திரு லீ எடுத்துரைத்தார்.
தேசிய ஒளிபரப்புத் தொடரில் அடுத்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் உரையாற்றவிருக்கிறார். அவரது ஆங்கில உரை நாளை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

