கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் பயணிகளையும் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர், ஸ்கூட் ஆகிய நிறுவனங்களின் விமானங்களில் பாதுகாப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
சாங்கி விமான நிலையத்தில் இந்த மாதம் மேலும் விமானச் சேவைகளும் இடைவழிப் போக்குவரத்தும் மீண்டும் தொடங்க இருப்பதால் விமானப் பயணங்கள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்
படுத்தப்படுவதாக இந்த நிறுவனங்கள் நேற்று தெரிவித்தன. எஸ்ஐஏ குழுமத்திற்குச் சொந்தமான விமானங்களில் செல்லும் பயணிகளுக்கு இன்று முதல் சுகாதாரச் சாதனங்கள் கொடுக்கப்படும்.
முகக்கவசம், துடைப்புத் தாட்கள், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றைப் பயணிகள் பெறலாம். விமானத்திலும் விமான நிலையக் கூடங்களிலும் துப்புரவு நடை
முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீட்சி அடைவதில் ஒருமித்த கவனம் செலுத்துகிறது என்றும் ஆட்குறைப்பில் அல்ல என்றும் அதன் தலைமை நிர்வாகி கோ சூன் போங் கூறினார்.
இப்போதைக்கு ஆட்குறைப்புத் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக சில விமான நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கி இருக்கின்றன.
நிறுவனம் 48 ஆண்டுகளில் முதன்முறையாக வருடாந்திர நிகர இழப்பை அறிவித்து உள்ளது.
இதனையடுத்து செலவுகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

