தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் சாதனம் குறித்து அமைச்சர் கருத்து

தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் சாதனம் குறித்து அமைச்சர் கருத்து

2 mins read
b2ba6378-6182-4e74-8ba8-addc1376afc5
-

கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய அரசாங்கம் உருவாக்கும் புதிய சாதனம், தனிநபர் ஒருவர் இருக்கும் இடத்தைக் கண்காணிக்காது என்று அறிவார்ந்த தேசம் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் செயலியைப் (TraceTogether) பயன்படுத்த விரும்புவோர் அவ்வாறு செய்யலாம் என்று அவர் கூறினார். இந்தப் புதிய சாதனம் பற்றி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாம் பேசியதைக் காட்டும் காணொளி ஒன்றைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னதாக பதிவிட்டிருந்தார். அந்தச் சாதனத்தின் பயன்பாடு குறித்த மக்கள் சிலரின் அக்கறைகளுக்கு நேற்று அவர் பதிலளித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்று கண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை 'புளூடுத்' தொழில்நுட்பத்தைக் கொண்டு அடையாளம் காண உதவும் செயலி, ஆப்பிள் சாதனங்களில் சரியாக வேலை செய்யாதது குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டது. கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் தடங்களைக் கண்டறிய உதவும் இந்தச் செயலி இங்கு அவ்வளவு பிரபலமாக இல்லை.

இந்தச் செயலி கடந்த மார்ச் மாதம் அறிமுகம் கண்டதைத் தொடர்ந்து அதை சுமார் 1.5 மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சருமான டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னதாகக் கூறியிருந்தார். சிங்கப்பூர் மக்கள்தொகையில் இந்த எண்ணிக்கை கால் பங்கு மட்டுமே ஆகும். இந்தச் செயலி நன்றாக வேலை செய்ய மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் இதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் சாதனத்தை உருவாக்குவதற்கான காரணத்தை டாக்டர் பாலகிருஷ்ணன் விளக்கினார். திறன்பேசி வைத்திருக்காதவர்களைக் கருத்தில்கொண்டு இந்தச் சாதனம் உருவாக்கப்படுவதாக அவர் சொன்னார். தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் செயலுடன் ஒரு சில திறன்பேசிகள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். அத்தகைய திறன்பேசிகளை வைத்திருப்பவர்களும் புதிய சாதனத்தைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.