கொவிட்-19 நோய்ப் பரவல், தொழிலகங்களில் பெரும்கட்டமைப்பு மாற்றங்களையும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள துறைகளில் வேலை இழப்புகளையும் முடுக்கிவிடலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். ஆயினும், சிங்கப்பூர் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு, வலுவான நாடாக வெளிப்படும் வகையில் ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் நிறுவனங்கள் தங்களது வர்த்தக முறைகள் குறித்து மறுபரிசீலனை செய்யவும் அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்று திரு ஹெங் கூறியிருக்கிறார்.
மாற்றத்தை முடுக்கிவிட நிறுவனங்களும் ஊழியர்களும் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நிதியமைச்சருமான திரு ஹெங் வலியுறுத்தி உள்ளார். புத்தாக்கம், உலகமயமாக்கம், எதிர்காலத்தில் வேலை ஆகிய மூன்று துறைகளில் குறிப்பிடத்தக்க, முடுக்கிவிடப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை நாடுகள் எப்படி எதிர்கொள்ளும் என்பதைப் பொறுத்தே பொருளியல் மீட்சி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாற்றத்தை எதிர்கொள்ள மக்களை ஆயத்தப்படுத்தும் நாடுகளே புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும் வகையில் நல்ல நிலையில் இருக்கும் என்றும் அவர் சொன்னார். அதனால்தான் இவ்வாண்டில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட நான்கு வரவுசெலவுத் திட்டங்களும் வேலைகளைக் காப்பது மட்டுமின்றி, வேலைப் பயிற்சியிலும் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதாக அவர் சுட்டினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ்களுக்கு இன்று அளித்த சிறப்பு நேர்காணலின்போது திரு ஹெங் இதனைத் தெரிவித்தார். வாழ்நாள் கற்றலில் வர்த்தகத் தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "ஒவ்வொருவரும் வாழ்நாள் கற்றலை தங்களது வாழ்வின் ஓர் அங்கமாக்கிக்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.

