வெளிநாட்டு ஊழியர்கள் ஊருக்குப் பணம் அனுப்ப எளிதான வழி

வெளிநாட்டு ஊழியர்கள் ஊருக்குப் பணம் அனுப்ப எளிதான வழி

2 mins read
a1417d7c-1947-4e18-a3fc-bb1e7820fa85
-

வெளிநாட்டு ஊழியர்கள் ஊருக்குப் பணம் அனுப்ப இனி தங்களது ஓய்வு நாட்களில் வரிசையில் காத்து நிற்கத் தேவையிராது.

ஊழியர்களின் சம்பளப் பட்டியலில் இருந்தே நேரடியாகப் பணத்தை அனுப்ப அவர்களுடனும் அவர்களின் முதலாளிகளுடனும் நிதித்தொழில்நுட்ப நிறுவனமான 'ரெம்சி' இணைந்து பணியாற்றி வருகிறது.

கடந்த மாதம் அறிமுகமான இந்தப் புதிய திட்டத்தின் மூலம், தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சொந்த ஊருக்கு அனுப்பவும் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற விவரங்களை வழங்கவும் ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பணப் பரிவர்த்தனை நிறைவுபெற்றதும் அது குறித்து ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பப்படும்.

இப்போதைக்கு, பணம் அனுப்ப தரகுத் தொகை வசூலிக்கப்படுவதில்லை . தரகுத் தள்ளுபடியை மேலும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ரெம்சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

பொதுவாக , ஒருமுறை பணம் அனுப்புவதற்கான தரகுத் தொகை $8 முதல் $15 வரை இருக்கலாம். ஒரு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் இதுவரை இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாக ரெம்சி பொது மேலாளர் பெர்னார்ட்லிம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

இந்தத் திட்டத்தில் மேலும் பல ஊழியர்களைச் சேர்க்கும் நோக்கில் என்டியுசியின் இல்லப் பணிப்பெண்கள் நிலையத்துடனும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் போன்ற அரசுசாரா அமைப்புகளுடனும் ரெம்சி இணைந்து பணியாற்றி வருகிறது.

"மின்னிலக்க முறையில் பணத்தை அனுப்ப முடிவதால் ஊழியர்கள் அதற்காக ஓய்வு நாட்களில் வரிசையில் நின்று நேரம் செலவிடத் தேவையிராது. அந்த நாட்களில் அவர்கள் ஓய்வெடுக்கலாம். பெரும்பாலான ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் நிலையில், இந்த முறையால் அவர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிகளையும் கடைப்பிடிப்பது எளிதாகிறது," என்றார் திரு லிம்.

ரெம்சி நிறுவனம் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவைகளை வழங்க சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் இருந்து உரிமம் பெற்றுள்ளது.