கொவிட்-19 நோய் பரவி வரும் தற்போதைய சூழலில் மக்களின் வாழ்வில் தொழில்நுட்பம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அதன் பொருட்டு, இந்த நிதி ஆண்டில் தகவல், தொடர்புத் தொழில்நுட்பத்தில் அரசாங்கத்தின் செலவினம் அதிகரிக்கவுள்ளது.
இந்த நிதி ஆண்டில் சுமார் $3.5 பில்லியன் செலவிடப்படும் என்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech) நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது. கடந்த நிதி ஆண்டில் $2.7 பில்லியன் செலவிடப்பட்டது.
கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்கொள்வதில் மின்னிலக்கத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் செயலியை அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதேபோல, 'சேஃப்என்ட்ரி' பதிவுசெய்யும் முறையையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
சிங்கப்பூரில் மின்னிலக்கத் திட்டங்களைத் துரிதப்படுத்த அரசாங்கம் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

