கொவிட்-19 கொள்ளைநோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக கட்டுமானத்துறை உள்ளது என்றும் வேலைத்தளங்களில் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் நேற்று தமது உரையில் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்கும் நோக்கில் தானியக்கத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டிய அவசியமும் ஏற்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"கட்டுமானத் துறையே எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதால் அந்தத் துறையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.
"உதாரணமாக, சிங்கப்பூரில் இதுவரை பதிவான கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களில் கணிசமான எண்ணிக்கையை வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களிடம் விரிவான, முறையான உடல்
நலப்பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
"அத்துடன் அவர்கள் வசிக்கும் இடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது," என்று திரு வோங் (படம்) கூறினார்.
தங்கும் விடுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக மேம்பாடுகள் செய்யப்பட்டு வந்தபோதிலும் கடந்த சில மாதங்களாக பெரும் கிருமிப் பரவல் மையங்களாக அவை உருவெடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் இதுபோன்ற கிருமித் தொற்றுகள் பரவாத வகையிலான வடிவமைப்பில் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றும் அவற்றிற்கான பாதுகாப்பு வழி
முறைகள் கடுமையாக்கப்படும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
"பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றாக வசிப்பதாலும் சமூக வசிப்பிடங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதாலும் கிருமித்தொற்று அபாயம் எப்போதும் இருக்கப்போகிறது என்பதை சிங்கப்பூர் நினைவில் வைத்திருக்க வேண்டி உள்ளது," என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

