கொவிட்-19 தொடர்பான குற்றங்கள்: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
3e70d006-e817-4d6e-a067-537c77d8a188
லட்சுமி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே இருந்தபோது இரு கத்திகளை வைத்திருந்ததுடன் மற்றொரு நபரைத் தாக்கியதாக 28 வயது ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஹுபர்ட் ஈ மெங் சாய் என்ற அந்த ஆடவர் முகக்கவசத்தை சரிவர அணியவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மூக்கையும் வாயையும் மறைக்கும் விதமாக அவர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

கிரேத்தா ஆயர் சாலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 10 மணியளவில் சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்தியதாகவும் ஹுபர்ட் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரிடம் 12 சென்டி மீட்டர் நீளமுள்ள இரு கத்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இலவச சட்ட உதவித் திட்டத்தின்கீழ் தாம் உதவி நாடப் போவதாக அவர் நீதிமன்றத்தில் நேற்று கூறினார்.

அடுத்த மாதம் 7ஆம் தேதி ஹுபர்ட் நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளை மீறியதாக கொவிட்-19 (தற்காலிக நடைமுறைகள்) சட்டத்தின்கீழ் வெவ்வேறு வழக்குகளில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி மற்றவர்களைச் சந்திக்கச் சென்றதாக 37 வயது லட்சுமி, 56 வயது ரவீந்திரன் மாரிமுத்து ஆகிய இருவர் மீது தலா 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நான்கு தடவையும் கடந்த மாதம் இரண்டு தடவையும் அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள தமது வீட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியதாக லட்சுமி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் வெற்றுத்தளம் போன்ற பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு ரவீந்திரன் மாரிமுத்து உட்பட வேறு குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை லட்சுமி சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை லட்சுமி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மற்றவர்களைச் சந்திப்பதற்காக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அங் மோ கியோவின் செங் சான் கிரெஸ்ட் பகுதியில் உள்ள தமது வீட்டைவிட்டு ஆறு முறை ரவீந்திரன் சட்டவிரோதமாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் 30ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.