கப்பல்துறை சிப்பந்திகளை மாற்றிவிடும் ஏற்பாடு குறித்து அமைச்சர் கருத்து

கப்பல்துறை சிப்பந்திகளை மாற்றிவிடும் ஏற்பாடு குறித்து அமைச்சர் கருத்து

1 mins read
f97874df-77c2-4322-a92b-1d0737315bfa
படம்: வில்ஹெல்ம்சென்-‌ஷிப்ஸ் ஏஜென்சி -

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 27ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 3,000 கடல்துறை சிப்பந்திகளை மாற்றிவிட கடல்துறை, துறைமுக ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.

கடல்துறை சிப்பந்திகள் கப்பல்களிலிருந்து வெளியேறி நாடு திரும்புவதற்கு இந்த வாரம் மூன்று தனி விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தகைய முதல் விமானப் பயணம் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இந்த விவரங்களை நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

உலகம் முழுவதும் கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடல்துறை சிப்பந்திகள் கப்பல்களிலோ அல்லது பணிக்குச் செல்ல முடியாமல் தங்களது சொந்த நாடுகளிலோ சிக்கித் தவிப்பதாக 'ஃபைனான்ஷியல் டைம்ஸ்' நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து திரு கோ இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.

"ஒப்பந்தகாலம் முடிவடைந்தும் ஏராளமான சிப்பந்திகள் பல மாதங்களாக பணியாற்றி வந்தனர். கப்பல்களிலிருந்து வெளியேறி நாடு திரும்புவதற்குப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

"பணியாளர்கள் மாற்றிவிடப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் அனைத்துலக கப்பல்துறை இயக்கம் முடிவுக்கு வரும் அபாயம் நிலவியது," என்று அவர் கூறினார்.

இந்த நிலையைத் தவிர்க்க, பாதுகாப்பான முறையில் பணியாளர்களை மாற்றிவிடுவதற்கு கப்பல்துறை பங்காளிகள், கடல்துறை சிப்பந்திச் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் சிங்கப்பூர் பணியாற்றி வருவதை திரு கோ சுட்டினார்.