கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான மருந்தை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க இருக்கிறது சிங்கப்பூர். அடுத்த வாரம் தொடங்கும் பரிசோதனை திடகாத்திரமாக உள்ள 23 பேரிடம் நடத்தப்பட உள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உயிர்தொழில்நுட்ப நிறுவனமான டைசான் உருவாக்கி இருக்கும் மருந்தின் முதற்கட்ட பரிசோதனை முயற்சியை சிங்ஹெல்த்தின் மருத்து ஆராய்ச்சிப் பிரிவு மேற்கொள்ளும். இந்தப் பரிசோதனை கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு நீடிக்கும்.
TY027 எனப்படும் அந்த மருந்து நோய்த் தடுப்பு ஆற்றலை கொண்டிருக்கிறதா என்றும் பாதுகாப்பானதா என்றும் பரிசோதிக்கப்படும். சார்ஸ்-கொவ்-2 என்னும் கிருமியே கொவிட்-19 உருவாகக் காரணம் என்பதால் அதனைத் தடுக்கும் சக்தி புதிய மருந்துக்கு உள்ளதா என சோதனைக்குப் பின் தீர்மானிக்கப்படும் என டைசான் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
"நோயாளிகளிடம் கொவிட்-19 நோயின் தீவிரத்தைத் தணிப்பதோடு அவர்கள் கிருமித் தாக்கத்திலிருந்து மீண்டு குணமடைவதை விரைவாக்குவதற்கான சிகிச்சையை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது TY027. அத்துடன் தொற்றுக்கு எதிரான தற்காலிக பாதுகாப்பை அளிக்கக்கூடிய வல்லமையை அது பெற்றிருக்கும்," என டைசான் நிறுவனம் தெரிவிக்கிறது.
முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்தால் அதற்கடுத்ததாக அதிகமான தொண்டூழியர்களின் உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை சோதிக்க அரசாங்க அமைப்பிடம் அனுமதி கோரப்படும் என்றும் அது கூறியது.
தற்போதைக்கு கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே நோக்கம். அதன் பின்னர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அல்லது வெளிநாட்டுப் பயணிகள் ஆகியோருக்கான இதர வகை தொற்றுக்குப் பயன்
படுத்த முடியுமா என்பது அடுத்தடுத்த சோதனை முடிவுகளைப் பொறுத்தது.
இந்தப் புதிய மருந்து கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இதர தொற்றுகளைத் தடுக்கவும் பயன்படக்கூடியதாக இருக்கும் என்று டைசான் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ஊய் எங் இயோங் தெரிவித்தார்.
டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கழகத்தில் பணியாற்றும் இவர், "பாதுகாப்பானது என்று உறுதியானதும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை கிருமி தொற்றாமல் இருக்கவும் இம்மருந்து தரப்படலாம்," என்றார்.
"இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். சிங்கப்பூரில் இருந்து கொவிட்-19 கிருமித்தொற்று அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்லும்போது அந்தக் கிருமி தொற்றிவிடாமல் தடுக்க இந்த மருந்து உதவக்
கூடியதாகவும் இருக்கும்," என்றும் பேராசிரியர் ஊய் தெரிவித்தார். ஏற்கெனவே ஸிக்கா கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது டைசான் நிறுவனம்.
முதற்கட்டமாக திடகாத்திரமான 23 பேருக்கு செலுத்தப்படும்

