இளையர்கள் தற்போது நிலவும் கொவிட்-19 நெருக்கடியால் ஏற்படும் கவலையை செயல்வடிவமாக மாற்றி வெற்றி பெற முடியும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
இனி வரும் நாட்கள் இளைய தலைமுறைக்குச் சிரமம் நிறைந்ததாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தாலும் வழி தெரியாது போன தலைமுறை உருவாகாமல் இருப்பதை சிங்கப்பூர் உறுதிசெய்யும் என்றார் திரு ஹெங்.
"கொவிட்-19 உங்களின் திட்டங்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால் உங் களின் முழு ஆற்றலை வெளிப் படுத்துவதை கிருமியால் தடுக்க முடியாது," என்றார் அவர்.
என்டியுசியின் இளையர் அணி ஏற்பாடு செய்த மெய்நிகர் வேலைவாய்ப்பு கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டபோது இவ்வாறு பேசினார். தற்போதைய சிரமமான காலகட்டத்தை ஒன்றாகக் கடந்துவர என்டியுசி, நிறுவனங்கள், அரசாங்கம் என முத்தரப்பின் வலுவான ஆதரவு இளையர்களுக்கு இருக்கும் என்று நிதி அமைச்சராகவும் உள்ள திரு ஹெங் உறுதி அளித்தார்.
இளையர்கள் மூன்று வழிகளில் தங்களின் கவலையை செயல்வடிவம் தந்து மாற்ற முடியும் என்று அறிவுறுத்தினார்.
பொருளியல் மீண்டு வரும்போது தேவைப்படக்கூடிய திறன்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்வது அவற்றில் ஒன்று.
சமூகத்திற்காக தொண்டூழியம் புரிவதை இரண்டாவது வழியாக அவர் சுட்டினார். குறிப்பாக மூத்தோர் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம் என்று அவர் கூறினார்.
மூன்றாவதாக சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான உற்சாகத்தையும் யோசனைகளையும் வழங்கலாம் என்று அவர் சொன்னார்.
வேலை பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பில் இங்குள்ள இளையர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் என்டியுசி இக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 800 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் ஓர் அங்கமாக முதலாளி களுடன் சந்தித்துப் பேசவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
'யங் என்டியுசி'யின் கீழ் 170,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பட்டதாரி மாணவர்களுக்கும் வேலை செய்யும் இளையர்களுக்கும் 'ஸ்டார்ட் ஒர்க்' தொகுப்புத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பயிலரங்குகள், நட்புவட்ட விரிவாக்க வாய்ப்புகள் போன்றவை மூலம் இளையர்கள் பயனடைவர் என்று கூறப்படுகிறது.

