சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று 39,000ஐ தாண்டியது

2 mins read
38bd0030-7d85-401f-8a3d-75cbd4f6fe75
டான் டோக் செங் மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள தேசிய தொற்று நோய் தடுப்பு நிலைய;K. படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 422 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.இதில் ஐந்து சம்பவங்கள் சமூகத்துடன் தொடர்புடையவை. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; நால்வர் வேலை அனுமதிச் சீட்டில் இருப்பவர்கள் என்று நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்றைய எண்ணிக்கையைச் சேர்த்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,387 ஆகியுள்ளது.

முன்னதாக, கிருமித்தொற்று கண்டறியப்பட்ட ஐந்து பள்ளி மாணவர்கள், ஒரு பள்ளி ஊழியர் ஆகியோருக்கு மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களில் ஐவர் வீடு திரும்பினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுவாசப் பிரச்சினைகள் கொண்ட 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த அறுவருக்கும் கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்ட 451 சம்பவங்களில் 7 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை. அவர்களில் ஐவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. அமைச்சு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஏழு பேரில், நால்வர் வேலை அனுமதிச் சீட்டில் வசிப்பவர்கள். அவர்களில் இருவர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டவர்கள்; ஒருவர் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவருடன் வசித்தவர்; நான்காமவர், கிருமித்தொற்று குழுமமாக இருக்கும் ஹாய் லெக் எஞ்சினியரிங் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றியவர். மற்ற மூவரும் 38, 56, 67 வயதுகளில் இருக்கும் சிங்கப்பூரர்கள்.

எண் 31 சுங்கை காடுட் அவென்யூவில் இருக்கும் தங்கும் விடுதியில் பாதுகாவல் அதிகாரியாக இருக்கும் 56 வயது ஆடவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் காணப்படவில்லை.

ஆனால், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் வழி அவருக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவரின் குடும்ப உறுப்பினரான 67 வயது ஆடவருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அறிகுறிகள் தென்பட்டன.

மூன்றாவது சிங்கப்பூரர், 38 வயதான தாதி. அவர் சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தில் பணிபுரிபவர். அவர் கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்ட பிறகு அந்தத் தாதி பணிக்குச் செல்லவில்லை.

விடுதிகளில் தங்கியிருக்கும் 444 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

9 சுங்கை காடுட் ஸ்திரீட் 3, 113 துவாஸ் வியூ வாக் 1, 19A டெக் பார்க் கிரசெண்ட் ஆகிய மூன்று புதிய தங்கும் விடுதி கிருமித்தொற்று குழுமங்களை சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.

நேற்று முன்தினம் மேலும் 655 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 26,523 பேர் குணமடைந்துள்ளனர்.

25 பேர் உயிரிழந்துள்ளனர்.