அனைத்துலக கடற்துறை நீதிமன்றத்திற்கு வரும் சச்சரவுகள் இனி சிங்கப்பூரில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் அனைத்துலக கடற்துறை நீதிமன்றத்தின் தலைவரான ஜின்-ஹியூன் பைக்கும் சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சருமான கா.சண்முகமும் நேற்று கையெழுத்திட்டனர். இதன்மூலம் அனைத்துலக கடற்துறை நீதிமன்றத்தைத் தவிர, வேறு இடத்தில் கடற்துறை தொடர் பான பூசல்களை விசாரணை செய்யக்கூடிய முதல் நாடாக சிங்கப்பூர் விளங்கும். ஐக்கிய நாடுகள் சபையின் 1982ஆம் ஆண்டு கடற்துறை சாசனத்தின்படி, சுயேட்சை யான அதிகாரம் கொண்ட இந்த நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் ஜெர்மனியின் ஹேம்பர்க்கில் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடற்துறை தொடர்பான பூசல்களை தீர்க்க விரும்பும் நாடுகள் அதற்கான விசாரணையை நடத்த சிங்கப்பூர் ஏற்புடைய நாடாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் சண்முகம், "இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரை ஒரு நடுநிலை மையமாக எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், அனைத்துலக சட்ட விதி முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடாகவும் அடையாளம் காட்டியுள்ளது. மேலும், சச்சரவுகளை அமைதி வழியில் தீர்க்கும் சிங்கப்பூரின் கடப்பாட்டையும் உறுதி செய்கிறது," என்று தெரிவித்தார்.

