மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தில் உடன்பாடு

மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தில் உடன்பாடு

3 mins read
cd0e4621-cf81-4a8d-94f2-080a76dd771c
-

மின்னிலக்கப் பொருளியலில் தலைதூக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஒத்துழைக்க வகைசெய்யும் மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் (டிஇபிஏ) சிங்கப்பூர், சிலி, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இன்று கையெழுத்திட்டன. வர்த்தக நடவடிக்கைகளை மின்னிலக்கமயமாக்குவது இங்குள்ள வர்த்தகங்களுக்கு எளிதாகவுள்ளது. இதனால் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பதுடன், செலவுகளும் குறைகின்றன என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் வர்த்தக, ஏற்றுமதி வளர்ச்சி துறை அமைச்சர் டேவிட் பார்க்கர், சிலியின் வெளியுறவு அமைச்சர் தியோடோரோ ரிபெரா நியூமன், அமைச்சர் சான் சுன் சிங் ஆகியோர் நேற்று காணொளி கூட்டத்தின் மூலம் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ள முதல் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு என்பதுடன், தொலைவில் இருந்தபடி இணைய சாதனங்கள் வழி கையெழுத்திடப்பட்டுள்ள முதல் அனைத்துலக உடன்பாடும் இது என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

"கொவிட்-19 நோய் பரவல் சூழ்நிலையில் சிங்கப்பூர் தனது பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதால் இத்தகைய மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகள் உதவும். சிங்கப்பூரின் மின்னிலக்க அமைப்புகளுக்கும் பங்காளித்துவ நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகங்களை இது எளிதாக்கும்," என்றார் அமைச்சர் சான்.

தெளிவான, இணக்கமான அனைத்துலக விதிகளை நிறுவ மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகள் வகை செய்கின்றன. மேலும், பொருத்தமான பாதுகாப்பு களுடன் நாடுகளுக்கு இடையே இலவச தரவு பரிமாற்றத்தையும் அவை அனுமதிக்கின்றன.

கொவிட்-19 சூழலிலும், புவியியல் வரம்பெல்லை பிரச்சினைகளைச் சமாளித்து, வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டிக்காக்கும் சிங்கப்பூரின் உறுதிப்பாட்டை இணையச் சாதனங்கள் வழி கையெழுத்திடப்பட்டது குறிக்கிறது என்று திரு சான் கூறினார். இந்த உடன்பாடு மூன்று நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு இடையில் இயங்கக்கூடிய தன்மையை ஊக்குவிக்கிறது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைச் செயல்படுத்துவதற்கான கூட்டுத் திட்டங்களை அவை தொடங்கியுள்ளன என்று சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சு, தொடர்பு தகவல் அமைச்ச, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது. எடுத்துக்காட்டாக, அனைத்துலக இணைப்புக் கட்டமைப்பில் சிங்கப்பூர் நியூசிலாந்துடன் பணியாற்றுகிறது. நியூசிலாந்துடன் இறைச்சி, இறைச்சிப் பொருட்கள் போன்ற பொருட்களுக்கான மின் சான்றிதழ்கள் பரிமாற்றத்தையும் இது உள்ளடக்கும். கொவிட் -19 தொற்றுநோய் பரவல், உலகளவில் மின்னிலக்க உருமாற்றத்தின் வேகத்தைப் பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது. எனவே அதிகமான வர்த்தகங்கள் மின்னிலக்க முறையில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்வதால், வர்த்தகங்கள் பரிவர்த்தனை செய்வதற்கும் தடையின்றி வர்த்தகம் செய்வதற்கும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் இன்னும் முக்கியமானதாக இருக்கும் என்று திரு சான் கூறினார். மின்னிலக்கப் பொருளியலில் வாய்ப்புகளைப் பெற வர்த்தகங்களுக்கு உதவும் வகையில், மின்னிலக்க இணைப்பை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் தொடர்ந்து ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்றார் திரு சான். "சிலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் நீண்டகால, அணுக்கமான உறவுகளைக் கட்டிக்காத்து வந்துள்ளது. மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டதன் மூலம், இந்த நாடுகள் மின்னிலக்கப் பொருளியலில் இன்னும் அணுக்கமாக செயல்படும். அத்துடன், தொற்றுநோயிலிருந்து விடுபடுவதற்கு பொருளியல் உறவுகளை மேம்படுத்துவோம்," என்று அவர் கூறினார். தென்கிழக்கு ஆசியாவில் மின்னிலக்கப் பொருளியல் 2025ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலராக (S$417 பி.) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.