சிங்கப்பூரில் கொரோனா கிருமிப் பரவலைக் கண்டுபிடிக்க அரசாங்கம் TraceTogether என்ற தேசிய செயலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது. அதேபோன்ற போலியான செயலிகள் இணையத்தில் தலைகாட்டி இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையின் ஒரு பிரிவான சிங்கப்பூர் கணினி அவசரகால பணிக்குழு என்ற அமைப்பு இவ்வாறு எச்சரித்தது.சிங்கப்பூர், கொரோனா கிருமி கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. இந்த நிலையில் TraceTogether செயலியில் நாட்டம் அதிகரித்துள்ளது.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தில்லுமுல்லு பேர்வழிகள் போலி செயலிகளை இணையத்தில் பரவவிடுகிறார்கள். இந்தச் செயலிகளைப் பயன்படுத்தும்போது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடிவிட முடியும் என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். என்றாலும் இதுவரையில் இதன் தொடர்பில் புகார் எதுவும் வரவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
செயலிகளை அதிகாரபூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபார்த்து பிறகு அவற்றைப் பயன்படுத்தும்படி சிங்கப்பூர் கணினி அவசரகால பணிக்குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

