பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நடைமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி சுமார் 3.67 மில்லியன் முகக்கவசங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன.
அந்தக் கவசங்களைப் பலமுறை பயன்படுத்தலாம். அவற்றில் 30 விழுக்காடு அல்லது 1.1 மில்லியன் கவசங்களை 24 மணி நேரமும் செயல்படும் இயந்திரங்களில் இருந்து மக்கள் பெற்றுக்கொண்டார்கள். எஞ்சியவற்றைச் சமூக மன்றங்கள், வசிப்போர் குழு நிலையங்கள் ஆகியவை விநியோகித்தன.
இந்த விவரங்களை மக்கள் கழகம் தெரிவித்து உள்ளது. சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படுகின்றன. இந்த நிலையில் முன்னிலும் அதிகமானவர்கள் வேலையிடங்களுக்குத் திரும்புகிறார்கள். அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
இப்போதைய காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்வோர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் நாளை மாலை 6 மணிக்குள் எல்லா சமூக நிலையங்களிலும் தங்களுடைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பெறலாம் என்று கழகம் நினைவூட்டி இருக்கிறது.
பணிப்பெண்களும் விடுதிகளில் தங்கியிராத வெளிநாட்டு ஊழியர்களும் ஹோட்டல்களில் தங்கி இருக்கும் அனைத்துலக மாணவர்களும் இந்த முகக்கவச விநியோகத் திட்டத்தில் பயன் அடையலாம்.
விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சின் முகவர்கள் முகக்கவசங்களை விநியோகிக்கிறார்கள்.
துணியால் ஆன முகக்கவசங்களை விநியோகிக்கும் நடைமுறை மே 26ஆம் தேதி தொடங்கியது. இந்த மூன்றாவது கட்டத்தில் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட முகக்கவசங்கள், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதம் விநியோகிக்கப்பட்ட முகக்கவசங்களைவிட அதிக காலம் நீடித்து உழைப்பவை.
அதிக பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. மிகவும் வசதியானவை என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
பிப்ரவரியில் முதல் கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு முகக்கவசங்கள் கொடுக்கப்பட்டன.
இரண்டாவது சுற்றின்போது கொடுக்கப்பட்ட முகக்கவசங்களையும் சேர்த்து பார்த்தால் சிங்கப்பூர் ஏழு மில்லியனுக்கும் அதிக துணியால் ஆன முகக்கவசங்களை விநியோகித்து இருக்கிறது.

