பாலியல் குற்றங்கள் புரிந்த 20 வயது இளையருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 24 பிரம்படிகளை விதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
முகம்மது அண்டி ஃபைசுல் முகம்மது இசாக் என்ற அந்தக் குற்றவாளி, 19 பெண்களுக்கும் இளம் மாதர்களுக்கும் எதிராக பல குற்றச்செயல்களைத் தனது 15 வயது முதல் 18 வயது வரைப்பட்ட காலகட்டத்தில் செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இளையரின் பாலியல் செயல்களால் பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் வயது வராத சிறுமிகள்.
அந்தச் சிறுமிகளில் ஒருவர் கர்ப்பிணியாகி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்திற்கு வந்துள்ள அதிர்ச்சி அளிக்கக்கூடிய, திடுக்கிடக்கூடிய பாலியல் குற்றச்செயல் விவகாரமாக இது இருக்கிறது என்று வர்ணித்தார்.
முகம்மது அண்டி, இணையம் மூலம் பலரோடும் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனக்கு இலக்கானவர்களின் படங்களையும் காணொளிகளையும் பெற்று, பிறகு அவற்றை வைத்துக்கொண்டு அப்பாவி பெண்களைத் தன்னுடைய இச்சைக்கு ஆளாகும்படி பலவந்தப்படுத்தினார் என்று கூறப்பட்டது.
தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவரான அண்டி, சமூகத் தொண்டூழியர்களை வேலையில் சேர்ப்பதாக நடித்து அதன்மூலமும் பலரையும் ஏமாற்றி தன் காமப்பசிக்கு இணங்க வைத்தார் என்று கூறப்பட்டது.
அவர் பாலியல் பலாத்காரம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டு களின் பேரிலும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிப்பில் இதர 59 குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
வயது குறைந்த பெண்கள் இருவரிடம் பாலியல் குற்றங்கள் புரிந்ததற்காக 2015ஆம் ஆண்டில் அண்டி முதன்முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அடுத்த மாதம் 21 வயதாகும் அண்டி, பாலியல் நடவடிக்கைகள் தொடர்பான தனது எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதில் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

