பயணிகளுக்கு ரசீது தராத டாக்சி ஓட்டுநர்களுக்கு அபராதம்

பயணிகளுக்கு ரசீது தராத டாக்சி ஓட்டுநர்களுக்கு அபராதம்

2 mins read
995d1ae9-bff0-43c3-9360-a8d535e0cb58
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தனது டாக்சி ஓட்டுநர்கள் ஏப்ரல் 7 முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை, சுமார் ஒரு மாத காலத்துக்கு வாடகை செலுத்த  வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டாக்சி ஓட்டுநர்கள் தங்களின் பயணிகளுக்கு அச்சிடப்பட்ட ரசீதுகள் தர வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அவ்வாறு செய்யாதவர்களுக்கு $50 அபராதம் விதிக்கப்படும் என்று வியாழக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் வேண்டாம் என்றாலும் ரசீது தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கொவிட்-19 சூழலில் தொடர்புகளின் தடங்களை அறியும் முயற்சிக்கு இது கைகொடுக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது. ரசீதுகளைப் பயணிகள் குறைந்தது 14 நாட்களுக்கு வைத்திருக்கவும் ஆணையம் வலியுறுத்திக் கூறியுள்ளது. இருப்பினும் எந்த அளவுக்கு இப்புதிய விதி பயனளிக்கும் என்று இதில் தொடர்புடையவர்களும் ஓட்டுநர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். "தற்போதைய கிருமித்தொற்று சூழலில் அதிகபட்சமாகவே சில ஓட்டுநர்களுக்கு 50 வெள்ளிதான் வருமானம் வருகிறது. இந்த அபராதம் அந்த ஒரு நாள் வருமானத்தையே விழுங்கிவிடும்," என்று தேசிய டாக்சி கழகத்தின் நிர்வாக ஆலோசகரான அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அங் ஹின் கீ கூறியுள்ளார்.

டாக்சிகளில் 'சேஃப்என்ட்ரி' எனப்படும் வருகைப் பதிவுமுறைக் கான கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கும் மேலாக இந்த ரசீது கொடுக்கும் நடவடிக்கையும் நடப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. குறிப்பாக ஸ்கேன் செய்ய இயலாத பயணிகளுக்கு இந்த ரசீது வழங்கும் விதி பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும் கைபேசி உள்ள ஒருவர், 'சேஃப்என்ட்ரி' மூலம் பதிவு செய்த பின்னர், ரசீது தரத் தேவை இருக்காது என்று திரு அங் சுட்டினார். அதற்குப் பதிலாக மின்னிலக்க முறையில் பதிவு செய்யும் 'சேஃப்என்ட்ரி'யை அனைவரும் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் கைபேசி செயலிகள் மூலம் டாக்சி சேவை பெறும் பயணிகளுக்குத் தொடர்ந்து மின்னியல் முறையில் ரசீதுகள் அனுப்பப்படும் என்றும் இவர்களுக்கு ஓட்டுநர்கள் ரசீது தரத் தேவையில்லை.