மின்னிலக்கப் பொருளியலில் சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை ஏற்படுத்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சிறு வர்த்தகங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதையும் எந்தவொரு குடிமகனும் தொழில்நுட்ப உலகில் விடுபட்டுவிடக்கூடாது என்பதையும் நோக்கங்களாகக் கொண்டது இக்குழு.
மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் தழுவி நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மின்னிலக்க உருமாற்றத்திற்கான அமைச்சுகள் நிலை குழு வேகப்படுத்தும்.
அத்துடன் அதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தும். நாட்டு மக்கள் வேலை செய்யும் முறையிலும் வர்த்தகங்கள் நடத்தப்படும் முறையிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கும் கட்டாயத்தை கொவிட்-19 சூழல் உருவாக்கி உள்ளது.
அதனையொட்டி மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை விரைந்து ஏற்கவேண்டிய அவசியம் இங்கு ஏற்பட்டு உள்ளது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் வேலைகளை உருவாக்க நிறுவனங்களுடனும் தொழிலாளர் இயக்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதையும் அந்த வேலைகளில் சிங்கப்பூரர்களை அமர்த்து வதிலும் புதிய குழு கவனம் செலுத்தும்.
இணையம்வழி நடத்தப்பட்ட நேர்காணலில் தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இத் தகவலைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மொத்த ஊழியரணியில் 65 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். எனவே அத்தகைய நிறுவனங்கள் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதும் அதற்கு அவை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் குழுவின் முக்கிய நோக்கங்கள்.
தொடக்கமாக, கொவிட்-19 சூழலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் துறை மீதும் உணவு பானத் துறை மீதும் குழு சிறப்புக் கவனம் செலுத்தும்.
அடுத்தகட்டமாக, மக்கள் தொகையில் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தோர் மின்னிலக்கத்தை ஏற்பதால் விளையும் நன்மைகளை அடைய வேண்டும். அந்த வகையில் உணவு அங்காடிக் கடைக்காரர்கள் மீதும் மூத்த குடிமக்கள் மீதும் கவனம் செலுத்தப்படும்.
புதிய உயர்மட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்குடன் பகிர்ந்துகொள்ளும் திரு ஈஸ்வரன், இப்போதைய சூழல் மின்னிலக்க எதிர்காலத்துக்கான முயற்சிகளை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
'டெக்ஸ்கில்ஸ் ஆக்ஸிலேட்டர்' திட்டங்கள் மூலம் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 5,500 வேலைகளை உருவாக்க அரசாங்கம் இலக்கு வகுத்திருக்கிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைக்குப் பொருந்தும் வகையிலான அம்சங்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.
சிங்கப்பூரர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான எந்த ஒரு முயற்சியையும் அரசாங்கம் விட்டுவைக்காது என்று தெரிவித்த திரு ஈஸ்வரன், பட்டம் பயின்ற இளையர்களையும் இடைநிலை வாழ்க்கைத்தொழில் நிபுணர்களையும் புதிய வேலைகளில் அமர்த்த வேண்டியுள்ளதால் அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
அதற்காக முதலாளிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
"இப்போது நாம் சந்தித்து வரும் சூழலில் இந்த ஏற்பாடுகள் சவால்மிக்கவையாக இருக்கும் என்றாலும் நாம் நமது லட்சியத்தை அடைவோம்," என்றார் திரு ஈஸ்வரன்.

