கொள்ளைநோயை முறியடிப்பதில் தீவிரமாக நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் இணையக் குற்றங்கள் போன்ற பாதுகாப்பு மிரட்டல்களுக்கு எதிராகவும் சிங்கப்பூர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
உதாரணத்துக்கு, உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இணைய ஊடுருவிகள் அதன் மின்னஞ்சல் கணக்குகளுக்குள் ஊடுருவ முயன்றிருக்கிறார்கள் என்று அந்நிறுவனம் இவ்வாண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது.
"பாதுகாப்புச் சூழ்நிலை நிலையற்றது, மிகவும் சிக்கலானது. சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் வாழும் நம்மிடம் பாதுகாப்பில் தென்படக்கூடிய மெத்தனப்போக்கைச் சமாளிப்பதற்கான உத்திகள் இல்லை.
"இணையவெளியில் எப்போதும் இருக்கக்கூடிய, வளர்ந்துவரும் ஒரு மிரட்டல் உள்ளது. அதுதான் மின்னிலக்கக் கிருமி. அது இயல்பான கிருமியைவிட ஆபத்தானது.
"மின்னிலக்கத்தை அதிகம் சார்ந்திருக்கும் சமூகமாக இருக்கும் நாம், கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்க்க அதிகமான மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தி போராடி வருகிறோம். ஆகவே, சிங்கப்பூர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றும் திரு ஹெங் விவரித்தார்.
முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரு ஹெங்கின் உரை கொண்ட காணொளி, சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் ஆணை பெற்ற அதிகாரிகளாக நேற்று அறிவிக்கப்பட்ட முப்படைகளின் 374 அதிகாரிகளுக்குக் காண்பிக்கப்பட்டது.
அந்த உரையில் துணைப் பிரதமர், கொவிட்-19க்கு எதிரான போரில் பங்களித்து வரும் தற்காப்புச் சமூகத்துக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை என தற்காப்பு சமூகத்தைச் சேர்ந்த 6,000க்கு மேற்பட்டோர் கொள்ளைநோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
"கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர் ஆயுதப்படை சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், அது மிக உயர்ந்த அளவிலான செயல்பாட்டு விழிப்பு மற்றும் தயார்நிலையைத் தொடர்ந்து கட்டிக்காத்து வர வேண்டும்," என்று குறிப்பிட்ட திரு ஹெங், "நமது நாட்டையும் நாட்டின் எல்லைகளையும் பாதுகாக்கும்போது அங்கு ஒருபோதும் இடைவெளி ஏற்பட அனுமதிக்கக்கூடாது," என்றும் கூறினார்.
"சிங்கப்பூர் ஆயுதப்படையும் தனது இணையப் பாதுகாப்பு ஆற்றல்களை வலுப்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு, ஆணை, கட்டுப்பாடு, தொடர்பு, கணினி மற்றும் உளவு ஆகியவை அடங்கிய ஒரு புதிய பிரிவை அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் வரும் செப்டம்பரில் அது தொடங்கவிருக்கிறது.
"பாதுகாப்பு மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், சிங்கப்பூரையும் மக்களின் வாழ்க்கையையும் தற்காக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் இலக்கு என்றுமே மாறாமல் இருக்கும். அதற்கு நமது படை வீரர்களின் விடாமுயற்சியும் கடப்பாடும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன," என்றார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.

