சிங்கப்பூர் மக்கள் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஐவரைக் களம் இறக்கவுள்ளது. இம்முறை மிகுந்த அரசியல் அனுபவசாலியான திரு சியாம் சீ டோங்கும் அவரது துணைவியார் லீனாவும் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அக்கட்சி பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியிலும் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியிலும் போட்டியிடும். ஐந்து வேட்பாளர்களில் இருவர் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கட்சியின் தலைவரரான 48 வயது ஜேசோ ரேமண்ட் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் போட்டியிடுவார். அத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக திரு சியாம் 1984 முதல் 2011 வரை 27 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.
பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியில் கட்சியின் தலை மைச் செயலாளர் ஸ்டீவ் சியா, உறுப்பினர்கள் ஒஸ்மான் சுலைமான், மெல்வின் சியூ, உதவித் தலைவர் வில்லியம்சன் லீ ஆகியோர் போட்டியிடுவார்கள்.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் கடந்த மூன்று ஆண்டு களாக அடித்தளப் பணிகளில் ஈடுபட்டு வந்திருப்பதாக திரு ரேமண்ட் கூறினார்.
"அத்தொகுதியில் இரண்டு தவணைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படும் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவது சிரமம் என்றாலும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்குத் தாம் பல வழிகளில் உதவியுள்ளதாகவும் நேரம் வரும்போது பொத்தோங் பாசிர் வாக்காளர்களின் தங்கள் பிரதிநிதியைத் தேர்வு செய்வார்கள்," என்றும் திரு ரேமண்ட் சொன்னார்.
மக்கள் செயல் கட்சியின் திரு சீத்தோ யிப்பின் 2011ஆம் ஆண்டு முதல் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார். கடந்த 2015 தேர்தலில் திரு சீத்தோ 66.4% வாக்குகளுடன் வென்றார்.

