குறைந்த வருமான ஊழியர்கள் பலரும் கொவிட்-19 கட்டுப்பாட்டுக் காலத்தில் தொடர்ந்து ஊதியத்துடன் வேலை பார்த்து வருகிறார்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
அவர்கள், அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரில் 2019 கடைசி மூன்றாண்டு காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த வேலையின்மை விகிதம் அதிகரித்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் குறைந்த வருமான ஊழியர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.
அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சரின் விளக்கம் இடம்பெற்றது.
கொவிட்-19 காரணமாக பொருளியலுக்கு ஏற்பட்டு வரும் பெரும் பாதிப்புகளின் விளைவாக பல நிறுவனங்களும் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன.
அல்லது பலரையும் தற்காலிகமாக வேலையைவிட்டு நிறுத்தி இருக்கின்றன. இப்படி செய்வதன் மூலம் நிறுவனங்கள் செலவைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஆட்குறைப்பும் அதிகரித்துள்ளது.
இத்தகைய ஒரு சூழலில் குறைந்த வருமான ஊழியர்களுக்கு வேலை போனால் அவர்களுக்குப் பாதிப்பு மேலும் கூடிவிடும் என்று கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலை தொடர்பில் விளக்கம் அளித்த திருவாட்டி டியோ, கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியமற்ற நிறுவனங்கள்தான் செயல்படவில்லை என்றார்.
ஆனால் உயிர்நாடியான அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இத்தகைய சேவைகளில்தான் குறைந்த வருமான ஊழியர்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறைந்த வருமான ஊழியர்களில் ஏராளமானவர்கள் அத்தியாவசிய வேலைகளைப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஆகையால் அவர்கள் தொடர்ந்து வேலை பார்க்க முடியும். என்றாலும் அத்தகைய ஊழியர்களைக் கைதூக்கிவிடுவதே சிறு, குறு காலங்களிலும் நீண்டகால நோக்கிலும் அரசாங்கத்தின் விருப்பம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
முதிய ஊழியர்கள், இதர ஊழியர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உதவிகளையும் அவர் சுட்டினார். ஊழியர்களின் சம்பளம், நல்வாழ்வு ஆகியவற்றை முறையாக கவனித்து வரும்படி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், இதன் தொடர்பில் முத்தரப்பு பங்காளிகளுடன் மனிதவள அமைச்சு சேர்ந்து செயல்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

