வர்த்தகங்கள் மீண்டும் இயங்கியதும் கூடுதல் வேலை நேரம்: ஊழியர்கள் அதிருப்தி

வர்த்தகங்கள் மீண்டும் இயங்கியதும் கூடுதல் வேலை நேரம்: ஊழியர்கள் அதிருப்தி

2 mins read
aa3b24a9-ccaf-44e9-8092-c2c31f6b1780
-

கொவிட்-19 தொடர்பில் கிருமி முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்து வருகிறது. இது மூன்று கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், முதலாளிகள் முன்வைக்கும் சில நிபந்தனைகள் குறித்து ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டதும் இன்னும் கூடுதலான நேரத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தங்களின் முதலாளிகள் கூறியதாக சிலர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் ஊழியரின் ஓர் ஆண்டுக்குரிய விடுப்பு நாட்களையும் சில நிறுவனங்கள் குறைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

வேலையை விட்டு நீக்காமல், சம்பளத்தை அளித்தாலும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது முறையானதா எனச் சிலர் மனிதவள அமைச்சிடமும் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

'சம்பளத்தைத் தந்தாலும் அதற்கான வேலையைப் பின்னர் செய்ய வேண்டும்' என்ற இந்த உத்தியை முதலாளிகள் பயன்படுத்துவது நியாயமற்றது என்று கூறிவிட முடியாது என மனிதவள அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னாளில் செய்ய வேண்டிய வேலைக்காக முன்னரே ஊதியத்தைத் தரும் முறையை இந்த முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்று பேச்சாளர் விளக்கினார்.

உதாரணத்திற்கு, மலேசிய வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியரைக் கொண்ட ஒரு முதலாளிக்கு 'வேலை ஆதரவுத் திட்ட' வழங்குதொகை கிடைத்திருக்காது.

அத்துடன் வெளிநாட்டு ஊழியர் தீர்வையில் ஒவ்வொரு மாதமும் $750 கழிவு மட்டுமே கிடைக்கும். இதனால் சில முதலாளிகள் இவ்வாறு முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மார்ச் 12 முதல் செலவுகளை மிச்சப்படுத்துவதற்காக தாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து 4,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மனிதவள அமைச்சிடம் தெரிவித்து வருவதாக பேச்சாளர் பகிர்ந்துகொண்டார்.

அவ்வகையில் இந்த 'முதலில் சம்பளம்; பின்னர் வேலை' உத்திமுறையைப் பயன்படுத்த உள்ளதாக 120க்கும் மேலான நிறுவனங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

விண்ணப்பித்த நிறுவனங்கள் பெரும்பாலும் உணவு மற்றும் பானம், ஹோட்டல், சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ளவை என்று கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு வெறும் ஆறு நிறுவனங்கள் மட்டுமே இந்த உத்தியைப் பயன்படுத்த இருப்பதாகக் கூறியிருந்தன.

"வியாபாரம் இல்லாதபோதும் முழுச் சம்பளத்துடன் ஊழியர்களுக்கு ஆதரவு அளித்த வண்ணம், செலவுகளைச் சமாளிக்கவும் மனிதவளத்தைத் திறம்படப் பயன்படுத்தவும் இந்த உத்தி பெரிதும் கைகொடுக்கும்," என்றார் பேச்சாளர்.

இருப்பினும் செலவுகளைக் குறைப்பதற்காகத் தாங்கள் செயல்படுத்த உள்ள நடவடிக்கைகள் குறித்து நிறுவனங்கள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை நியாயமானதாகவும் பொறுப்புடையதாகவும் உள்ளன என்றும் கூறப்படுகிறது.