பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 15ஆம் தேதி வரை அரசாங்கத்தின் 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர் (இஎஸ்ஜி)' அமைப்பிற்கு 110,000 தொலைபேசி அழைப்புகளை விடுத்தன.
இதே காலகட்டத்தில், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம், கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் போன்றவை தொடர்பில் வந்த ஏறக்குறைய 45,000 மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிக்கப்பட்டதாக இஎஸ்ஜி அமைப்பு தெரிவித்தது.
தை செங்கில் அமைந்துள்ள இஎஸ்ஜி அமைப்பின் பிரத்தியேக தகவல் அழைப்பு மையத்தை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், அந்த அழைப்பு மையம் தொழில் நிறுவனங்களுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் இடையிலான இருவழித் தொடர்பிற்கு வழிவகை செய்கிறது எனக் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவற்றின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதோடு இது நின்றுவிடவில்லை என்று அமைச்சர் சான் சொன்னார்.
"நிறுவனங்களின் கேள்விகள் மூலம் நிலைமையை, சிரமங்களை, வாய்ப்புகளை அறிந்துகொள்ள முடிகிறது. இது, அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளில் சிலவற்றை மேம்படுத்த உதவுகிறது," என்றார் திரு சான்.
"நீடித்து நிலைக்கும் விதத்தில் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என விரும்புகிறோம். ஆதலால், அவை தங்களின் நலன் கருதி, பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் நடப்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரலில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டபின், 48 அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 800 தொண்டூழியர்களுடன் அம்மையம் ஏற்படுத்தப்பட்டது. இப்போது, ஏறக்குறைய 50-60 பேர் அன்றாடம் வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்து வருகின்றனர்.
நாளை மறுநாள் முதல் அதிகமான பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கவிருப்பதால் இரண்டாம் கட்டத் தளர்வு வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பில் நிறுவனங்களுக்குப் பல கேள்விகள் எழலாம். அதனால் வரும் மாதங்களிலும் அந்த மையம் தொடர்ந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

