நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தில் மின்சாரப் பயன்பாடு 22% கூடியது

வீடுகளில் மின்சாரப் பயன்பாடு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட, கடந்த மே மாதத்தில் சராசரியாக 22 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று எரிசக்திச் சந்தை ஆணையமும் (இஎம்ஏ), ‘சிங்கப்பூர் பவர்’ குழுமமும் நேற்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளன.

வெப்பமான வானிலை காரணமாக காற்றாடிகள், குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரித்ததுடன், அதிகமானவர்கள் கணினி போன்ற மின்னியல் சாதனங்களை வீட்டில் இருக்கும்போதோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும்போதோ பயன்படுத்தினர். இதனால் மின்சாரப் பயன்பாடு கூடியதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பொதுவாக, சிங்கப்பூரில் வீட்டு மின்சாரப் பயன்பாடு வெப்பமான ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் அதிகரிக்கிறது என்று அவை தெரிவித்தன.

ஜூன், ஜூலை மாதங்களுக்கான மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கலாம் என்று அவ்வமைப்புகள் தெரிவித்தன. ஏனெனில், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணங்கள் முந்தைய மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. மேலும் அவை உண்மையான பயன்பாட்டு அளவுடன் வேறுபடலாம் என்று அவை விளக்கின.

பொதுவாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம், எரிவாயு, தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பதிவு செய்ய அளவீட்டு அதிகாரிகள் வீடுகளுக்கு வருகிறார்கள். எனினும், ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையிலான கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, மின்சாரப் பயன்பாடு அளவீட்டுச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இச்சேவை மீண்டும் தொடங்கப்படுவதன் மூலம், ஏப்ரல், மே மாதங்களில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் வேறுபாடு ஜூன் அல்லது ஜூலை மாதக் கட்டண பட்டியலில் பிரதிபலிக்கும். எனவே, சில வீடுகளில் இந்த மாதங்களுக்கான கட்டணம் அதிகமாக இருக்கலாம்.

ஆயினும், ஒன்றாகக் கணக்கிடப்படும் மீட்டர்களைப் பயன்படுத்தும் 1.1 மில்லியன் குடும்பங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

மேம்பட்ட மின்சார மீட்டர்களைக் கொண்ட 300,000 வீடுகளுக்கு, மின்சார நுகர்வு அளவை நேரில் வந்து எடுக்கத் தேவையில்லை. அந்த வீடுகளுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான சரியான பயன்பாட்டு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்னதாக பிப்ரவரி மாதத்தில், தகுதி பெறும் வீவக குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் இந்த ஆண்டு பொதுப் பயனீட்டுச் செலவினங்களுக்கான இரு மடங்கு கழிவை, ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு யு-சேவ் (சிறப்புத் தொகை) மூலம் பெறலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தகுதியுள்ள குடும்பங்களுக்கு கூடுதல் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு யு-சேவ் கழிவு கிடைக்கும்.

அடுத்த சுற்றுக் கழிவுத்தொகை வழங்கீடு அடுத்த மாதம் இடம்பெறும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தகுதிபெறும் பெரிய குடும்பங்களுக்கான கழிவுத்தொகையின் முதல் பகுதி அக்டோபரில் வழங்கப்படும்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பூரரைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தில் தங்கள் பயனீட்டுச் செலவுகளை ஈடுசெய்ய ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் $100 மானியம் கிடைக்கும்.

ஒற்றுமைக்கான பயனீட்டு உதவித் தொகை என்று அழைக்கப்படும் இந்தத் தொகை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அவர்களது பொதுப் பயனீட்டு கட்டணங்களில் வரவு வைக்கப்படும். இது அனைத்து வகையான வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொருந்தும்.

பயன்பாட்டு அடிப்படையில் சரியான கட்டணம் வசூலிக்கப்பட ‘எஸ்பி யுட்டிலிட்டிஸ்’ செயலி மூலம் குடும்பங்கள் தங்கள் சொந்த மின்சார மீட்டர் அளவீடுகளைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!