நாளை மறுதினம் (ஜூன் 19) முதல் மீண்டும் செயல்பட அனுமதி பெற்றுள்ள சில்லறை விற்பனைக் கடைகள், பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
பொதுவான இடங்களைக் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது, கடைக்கு வருபவர்களின் விவரங்களைப் பதிவுசெய்ய 'சேஃப் என்ட்ரி' முறை அமல்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைகள் பின்பற்ற வேண்டும்.
வர்த்தகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை நேற்று வெளியிட்டன.
கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், தனிக்கடைகள் உள்ளிட்டவை இந்த நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
அனைத்து கடைத்தொகுதிகளும் 930 சதுர மீட்டர் தரை பரப்பளவைக் கொண்டிருக்கும் பெரிய தனிக்கடைகளும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 10 சதுர மீட்டர் தரை பரப்பளவுக்கு ஒரு நபரை அனுமதிக்கும் வரம்பை அவை கடைப்பிடிக்க வேண்டும்.
கடைகளின் நுழைவாயில், காசாளர் முகப்பு உள்ளிட்ட இடங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பதற்கு வகைசெய்யும் கோட்டை, கடை நிர்வாகம் வரையறுக்க வேண்டும். வாடிக்கையாளர் 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கடைகள் உறுதிசெய்ய வேண்டும்.
கடைகள் மற்றும் கடைத்தொகுதி வளாகத்தில் நடவடிக்கைகள் அல்லது நிகழ்வுகள் நடைபெற அனுமதி கிடையாது. மேலும், கடைத்தொகுதி வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து கடைத்தொகுதிகள், பெரிய தனிக்கடைகள், பேரங்காடிகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் 'சேஃப் என்ட்ரி' பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக நடப்பில் இருந்த கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக தளர்த்தப்பட்டிருக்கும் காலத்தில், கடைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பதைப் பார்வையிட அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்துவர்.
கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொருள் விநியோக ஊழியர்கள் என அனைவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக தெளிவான வழிகாட்டிப் பலகைகள் கடைகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பு நடைமுறைகளை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

