முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு $255 மில்லியன் மெடிசேவ் நிரப்புத்தொகை

2 mins read
7437de28-2b53-46d3-a011-a9093c5091e6
முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த சுமார் 450,000 மூத்தோருக்கு $160 மில்லியன் நிரப்புத்தொகையும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த சுமார் 500,000 பேருக்கு $95 மில்லியன் நிரப்புத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தன. 2019 செப்டம்பர் மாதம் டெம்பனிஸ் ஹப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மூத்தோருடன் துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஹெங் சுவி கியட் /ஃபேஸ்புக் -

முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோரின் மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்கில் அடுத்த மாதம் மொத்தம் $255 மில்லியன் மதிப்பிலான நிரப்புத்தொகை செலுத்தப்படவுள்ளது.

'மெடிஷீல்ட் லைஃப்' மற்றும் மெடிசேவ் அங்கீகாரம் பெற்ற மற்ற காப்புறுதித் திட்டங்களின் சந்தாக்களுக்கு இந்த நிரப்புத்தொகையைப் பயன்படுத்தலாம். அத்துடன் மருத்துவமனையில் தங்குவதற்கான செலவுகள், வெளிநோயாளி சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் இத்தொகையைப் பயன்படுத்தலாம்.

இத்தொகை அடுத்த மாதம் மூத்தோரின் மெடிசேவ் கணக்கில் நிரப்பப்படும் என்றும் இது தொடர்பான கூடுதல் விவரங்கள் கடிதம் வழி அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. மூத்தோர் சுமார் ஒரு மில்லியன் பேரின் வாழும் காலம்வரை நீடிக்க, இதுபோன்ற தொகுப்புத் திட்டங்களுக்கு மொத்தம் $14 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"சிங்கப்பூருக்குப் பங்களித்த நம் முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறைகளைச் சேர்ந்த மூத்தோருக்கு நன்றிகூற விரும்புகிறோம்," என்றார் திரு ஹெங்.

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த சுமார் 450,000 மூத்தோருக்கு $160 மில்லியன் நிரப்புத்தொகையும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த சுமார் 500,000 பேருக்கு $95 மில்லியன் நிரப்புத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் வயது அடிப்படையில் $200 முதல் $800 வரையிலான நிரப்புத்தொகை செலுத்தப்படும். மெர்டேக்கா தலைமுறையினர் 2019ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை தங்களின் மெடிசேவ் கணக்கில் ஆண்டுதோறும் $200 பெறுவர்.

இதற்கிடையே 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் மெடிசேவ் நிரப்புத்தொகையும் இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் நிரப்பப்படும் இத்தொகை, மூத்தோரின் வயது, இருப்பிடத்தின் வருடாந்திர மதிப்பு, அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிரப்புத்தொகை கணக்கிடப்படும்.