பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள்

பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள்

2 mins read
0e66e08b-5451-4796-9f35-c2f5602e78d9
கல்வி அமைச்சு குறிப்பிட்ட நிலையங்களில் நடத்தும் வகுப்புகளும் இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து தொடங்கும். உடற்பயிற்சி வகுப்புகள் என வரும்போது, மாணவர்களுக்கு இடையே நேரடித் தொடர்பு குறைந்தபட்ச அளவில் இருப்பதை வகைசெய்யும் குழு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். பூப்பந்து, மேசைப்பந்து, 'வாலிபால்', 'செபாக் தக்ராவ்' போன்ற விளையாட்டுகள் அனுமதிக்கப்படும். படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து அனைத்து நிலைகளையும் சேர்ந்த மாணவர்கள் அன்றாடம் பள்ளிக்குத் திரும்பவுள்ள வேளையில், இணைப்பாட நடவடிக்கைகள் உட்பட கூடுதல் பள்ளி நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.

இணைப்பாட நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இணைப்பாட நடவடிக்கைகளைப் பள்ளி அனுபவத்தின் முக்கிய அம்சங்கள் என்று அமைச்சு வர்ணித்தது.

மின்னிலக்கத் தளங்கள் மூலம் பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படக்கூடிய இணைப்பாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பள்ளிகள் முற்படும் என்று அமைச்சு கூறியது. வகுப்பளவில் நடத்தப்படக்கூடிய நடவடிக்கைகளையும் பள்ளிகள் நடத்தலாம் என்று அது சொன்னது.

கல்வி அமைச்சு குறிப்பிட்ட நிலையங்களில் நடத்தும் வகுப்புகளும் இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து தொடங்கும். உடற்பயிற்சி வகுப்புகள் என வரும்போது, மாணவர்களுக்கு இடையே நேரடித் தொடர்பு குறைந்தபட்ச அளவில் இருப்பதை வகைசெய்யும் குழு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். பூப்பந்து, மேசைப்பந்து, 'வாலிபால்', 'செபாக் தக்ராவ்' போன்ற விளையாட்டுகள் அனுமதிக்கப்படும்.

ஆனால், குழுவாக ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐந்து மாணவர்கள் மட்டுமே விளையாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நடைமுறைகளும் எடுக்கப்பட வேண்டும்.

"இதற்கு ஆட்ட முறைகளிலும் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் தேவைப்படும்," என்று அமைச்சு விவரித்தது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக நாளையிலிருந்து (ஜூன் 19) தளர்த்தப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மூன்றாவது கல்விப் பருவத்திற்காக (Term 3) இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிவிட்டனர். தொடக்கநிலை 6, உயர்நிலை 4 மற்றும் 5ல் பயிலும் மாணவர்கள் வார நாட்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

எஞ்சிய மாணவர்கள், ஒரு வாரம் நேரடியாகப் பள்ளிக்குச் செல்வதும் மற்றொரு வாரம் வீட்டிலிருந்து கற்பதுமாக மாற்றி மாற்றி செய்து வருகின்றனர். இந்த ஏற்பாடு இம்மாதம் 26ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

உயர் கல்வி நிலைய வளாகங்களுக்குத் திரும்ப கட்டங்கட்டமாக கூடுதலான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சு கூறியது. செய்முறை, ஆய்வகம் சார்ந்த வகுப்புகளுக்குச் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு வகுப்பில் அதிகபட்சம் 50 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.