வெளிநாட்டுத் தலையீடு குறித்து வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தல்

வெளிநாட்டுத் தலையீடு குறித்து வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தல்

2 mins read
f3e5a0ab-6dc4-4cf2-94ef-d30aedb267f0
வாக்களிப்பு நாள் நெருங்கும் காலத்தில் கொவிட்-19 கிருமித் தொற்று நிலைமையின்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் துறை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வெவ்வேறு தகவல் தொடர்பு வழிகளில் வழங்கும். படம்: எஸ்டி -

வரும் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள், வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஆளாகாமலும் அதற்கு தாங்கள் உடந்தை ஆகா மலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வெளிநாட்டுத் தலையீட்டின் மிரட்டல் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொள்வதாலும் சந்தேகத்திற்குரிய நடத்தை, மறைமுகமான திட்டங்கள் ஆகியவை குறித்து விழிப்புடன் இருப்பதாலும் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தில் ஊடுருவல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

"சிங்கப்பூர் பொதுத்தேர்தல்களின் முடிவு சிங்கப்பூரர்களுக்காக மட்டும் இருக்க வேண்டும். சிங்கப்பூரர்கள் மட்டுமே முடிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்," என்று தேர்தல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தேர்தலிலும் பிரசாரத்திலும் சிங்கப்பூரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் துறை வலியுறுத்தியுள்ளது. இணையத்திலோ அல்லது வேறு எந்தத் தளத்தின் மூலமாகவோ வேட்பாளர்களுக்காக தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய விரும்பும் சிங்கப்பூரர்கள் அவற்றைச் செய்வதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கொண்டிருக்கவேண்டும். அந்தப் பத்திரத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களை வசப்படுத்த பிற நாட்டுச் சக்திகள் பலமுறை முயன்றுஇருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தல், 2018ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தல், பிரான்சிலும் ஜெர்மனியிலும் நடந்த 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் 2018ஆம் ஆண்டு இத்தாலிய பொதுத்தேர்தல் ஆகியவற்றில் பிற நாட்டு தலையீட்டுக்கான முயற்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வெளிநாட்டுத் தலையீடு பற்றிய அறிவுறுத்தல்களை சிங்கப்பூர் அதிகாரிகள் ஏப்ரலில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர்.

தங்களது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, இணைய மற்றும் சமூக ஊடகக் கணக்குகள், தரவுகளின் நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் அக்கட்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

சந்தேகத்திற்குரிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தங்கள் தளங்களைக் கண்காணிக்கும்படியும் சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து பதிவுகளைப் பகிர வேண்டாம் என்றும் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டுத் தலையீடு குறித்த எந்தச் சந்தேகம் எழுந்தாலோ தங்களது கணக்குகள் ஊடுருவப்பட்டதைக் கண்டுபிடித்தாலோ அவை குறித்து உடனே போலிசாரிடம் தெரிவிக்கும்படி கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்பாளர்களும் அவர்களது அதிகாரபூர்வ பிரதிநிதிகளும் தேர்தல் முறைக்குத் தகுந்த மரியாதை அளித்து தங்களது பிரசாரத்தைப் பொறுப்பாகவும் கண்ணியமாகவும் நடத்தவேண்டும் என்று தேர்தல் துறை, நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரசார வழிமுறைகளை வெளியிட்டபோது தெரிவித்தது.

தங்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களின் மீது வெறுப்பு, அவமதிப்பு போன்ற உணர்வுகளின் அடிப்படையில் பிரசாரம் நடத்துவதைக் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், ஊழல் போன்ற குற்றங்களின் தொடர்பில் முகாந்தரம்அற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பொய்யுரைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் அவர்கள் சமூகத்தின் இணக்கத்தைப் பாதிக்கும் விதமாகவோ இன, சமய பதற்றநிலையைஉண்டாக்கும் விதமாகவோ பேசக்கூடாது என்றும் தேர்தல் துறை கூறியது.