சிங்கப்பூர் இரண்டாம் கட்டமாக தன் பொருளியலைத் திறந்துவிட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் எவை எவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
வாடகை கார்களில் சேர்ந்து பயணம் செய்ய விரும்புவோர் அதற்கான பிரத்தியேக முன்பதிவு வலைத்தளங்கள் மூலம் பதிந்துகொண்டு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சகாக்களுடன் செல்லலாம். முன்பதிவு செய்யும்போது கிருமித்தொற்று தொடர்பான விவரங்கள் பதியப்படும்.
ஆனால் உரையாடல் குழுக்கள் போன்ற இணையத்தளங்கள் மூலம் முன்பதிவு செய்ய முடியாது என்பதை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
வீட்டிற்கு வருவோர்..
அதேபோல வீட்டு வேலை பணிப்பெண்கள் தாங்கள் வேலை செய்யும் வீட்டுக்கு வெளியே சென்று நண்பர்களைச் சந்திக்கலாம். இருந்தாலும் சிட்டி பிளாசா, லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா போன்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது.
கூட்டம் குறைவான வார நாட்களில் முதலாளியின் சம்மதத்துடன் அவர்கள் வெளியே சென்று வரலாம். யாரும் தங்கள் வீட்டில் சொந்தக்காரர்கள் அல்லாதவர்களையும் அனுமதிக்கலாம். ஆனால் ஐந்து பேர் என்று வரம்பு உண்டு. சந்திப்புகளைக் குறைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு அறிவுரை கூறியுள்ளது.
புகைப்படம் எடுக்கலாம்
வீட்டில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் வீட்டுப் பாடங்களை நடத்தவும் அனுமதி உண்டு. வெளிப்புறத்தில் இருக்கும் போதெல்லாம் முகக்கவசத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம்.
திருமணம், பாஸ்போர்ட் அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக புகைப்படங்கள் எடுப்பது அனுமதிக்கப்படும்.
சுவா சூ காங், மண்டாய், ஈசூனில் உள்ள அரசாங்க நிர்வாக அஸ்திக் கூடங்களுக்கும் சுவா சூ காங் இடுகாட்டிற்கும் செல்ல அனுமதி உண்டு.
என்றாலும் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற நிபந்தனைகள் எப்போதுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்கவேண்டும். முதியோர், சிறார்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து உள்ளது.
வாகன ஓட்டி பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 22 முதல் புக்கிட் பாத்தோக், கம்பஃர்ட்டெல்குரோ, சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர்ஸ் ஆகியவை செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்களில் 2 மீட்டர் இடைவெளியில் உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கவேண்டும். கூட்டம் கூடக்கூடாது என்று ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் நெறிமுறைகள் கூறுகின்றன. இத்தகைய நிலையங்களில் உள்ள சாதனங்களில் கிருமித்தொற்றா மருந்து அடிக்கப்பட்டு உள்ளன.
போட்டுப்பார்க்க...
கடைகளில் உடைகள், நகைகள், மூக்குக்கண்ணாடியை வாங்கும்போது அவற்றை வாடிக்கையாளர்கள் போட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளும்படி கடைகளுக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன.
வாடிக்கையாளர்கள் போட்டுப் பார்க்கும் பொருட்களை உடனுக்குடன் கூடுமான வரையில் கிருமிநாசினி அடித்தும் இதர பல வழி களிலும் சுத்தப்படுத்த வேண்டும். போட்டுப் பார்க்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கையைக் கடைகள் குறைக்க வேண்டும்.
உணவகங்களில் உணவை பகிர்ந்து எடுத்துச் சாப்பிட கரண்டிகளைப் பயன்படுத்தலாம். சாப்பிட்டு முடிந்ததும் மேசை, நாற்காலிகளைக் கிருமிநாசினி அடித்து சுத்தப்படுத்த வேண்டும். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அடிக்கடி புழங்கும் இடங்களில் கைகழுவும் திரவம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைக்கும்படி சிங்கப்பூர் வாசிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

