சாப்பாட்டு மேசைகளில் எச்சில் தெறிப்பதைத் தடுக்க ஏற்பாடு
கொவிட்-19 இரண்டாம் கட்ட தளர்வு நடப்புக்கு வந்துள்ளது. உணவகங்களில் ஐந்து பேர் வரை சேர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐந்து கடைத்தொகுதிகளில் உள்ள உணவுக் கூடங்களிலும் ஊழியர் உணவகங்களிலும் இருக்கும் சுமார் 500 சாப்பாட்டு மேசைகளில் தடுப்புக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று மாத காலம் தாக்குப்பிடிக்கக்கூடிய கிருமித் தடுப்பு பூச்சு பூசப்பட்டுள்ள அந்தத் தடுப்புக் கண்ணாடிகள் எதிரே மறு பக்கம் அமர்ந்து சாப்பிடுவோரை மறைக்காது. ஆனால் பேசும்போதும் சாப்பிடும் போதும் எச்சில், உணவு தெறிக்காமல் தடுக்கும். தெமாசெக் அறநிறுவனம், கேப்பிட்டல் லேண்ட், தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றின் முயற்சியின் விளைவாக இந்த ஏற்பாடு இடம்பெறுகிறது. இதற்கான செலவை இந்த அறநிறுவனம் ஏற்கிறது.
உடற்பயிற்சி வசதிகள்: இணையம் வழி முன்பதிவு அவசியம்
ActiveSG இயக்கத்தின் பாதுகாப்பான ஏற்பாடுகளை யொட்டி, அதனுடைய உடற்பயிற்சி வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் தனிப்பட்டவர்களும் குழுக்களும் இப்போது இணையத்தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். என்றாலும் இதற்கு விளையாட்டுத் திடல்கள் விதிவிலக்கு.
ஒரு வசதியைப் பயன்படுத்தக் கேட்டு ஒரு நாளில் ஒரு முறைதான் அவர்கள் பதியலாம். 14 நாட்கள் முன்னதாகவே முன்பதிவு அனுமதிக்கப்படும்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் 2ஆம் கட்டமாக அகற்றப்படும் நிலையில், ActiveSG இயக்கம் தன்னுடைய விளையாட்டு, உடற்பயிற்சி வசதிகளை எப்படி நிர்வகித்து வருகிறது, அவை செயல்படும் நேரம் என்ன என்பதை எல்லாம் அந்த இயக்கத்தின் தலைவர் சிங் ஹோக் லின், வியாழக்கிழமை ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டு நிலையத்தில் ஊடகங்களிடம் விளக்கினார்.
"இப்போதைய காலகட்டத்தில் எங்கள் நிலையங்களில், கூடங்களில் பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால் கூட்டம் சேர்வதை விரும்பவில்லை. இதில் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பொது விளையாட்டு வசதிகளை ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் (SportSG) அமைப்பு தான் நிர்வகித்து வருகிறது. இங்கு விளயாட்டு மற்றும் உடற்பயிற்சிக் கொள்கைகளுக்கு அதுதான் பொறுப்பு வகிக்கிறது. விளையாட்டு வசதிகள் வெள்ளிக்கிழமை முதல் மறுபடியும் செயல்பட தொடங்குவதாக அந்த அமைப்பு அறிவித்தது.
பாலாடைப் பொருளில் கிருமி: மீட்டுக்கொள்ள உத்தரவு
பிரிட்டனில் இருந்து வரும் ஒரு வகை பாலாடை பொருள் மீட்டுக்கொள்ளப் படுகிறது. பாக்டீரியா கிருமித் தொற்றுதான் காரணம் என்று சிங்கப்பூர் உணவு முகவை (SFA) தெரிவித்துள்ளது.
'பிரிமுலா' என்ற நிறுவனத்தின் பல்சுவை பாலாடை கிரீமில் (படம்) ஒரு வகை பாக்டீரியா கிருமி காணப்படுவதாகவும் அதனால் அந்தப் பொருட்களை மீட்டுக்கொள்ளும்படியும் பிரிட்டனின் உணவுத் தர முகவை அறிவித்து இருந்ததாக சிங்கப்பூர் முகவை அறிக்கையில் கூறியது. அவற்றை மீட்டுக் கொள்ளும்படி அவற்றை இறக்குமதி செய்யும் 'அடாஸ்கோ' நிறுவனத்திற்கு சிங்கப்பூர் முகவை உத்தரவிட்டு உள்ளது.
பாலாடைப் பொருட்களில் காணப்படும் கிருமி, மனித உடலில் பார்வை கோளாறு, பேச்சுக் கோளாறு, உணவை விழுங்க முடியாத நிலை, மூச்சுத் திணறல், தசைச் சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அந்தப் பொருளை யாராவது வாங்கி இருந்தால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று உணவு வாரியம் கூறி உள்ளது.

