சிங்கப்பூர்-மலேசியா நாடுகளுக்கு இடையில் சென்று வரும் பயணிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் மலேசியாவுடன் சேர்ந்து செயல்பட சிங்கப்பூர் ஆயத்தமாக இருக்கிறது என்று வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஊடகங்களிடம் கூறினார்.
குறுகிய கால தொழில்துறை மற்றும் அதிகாரபூர்வ பயணிகள், ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையில் சென்றுவரும் சிங்கப்பூரர்கள் மற்றும் மலேசியர்கள் அப்பயணிகளில் அடங்குவர்.
இத்தகைய இரு தரப்பு ஏற்பாடுகளில், இரு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கட்டிக்காக்க தோதாக பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட பொது சுகாதார நியதிகள் உள்ளடங்கி இருக்கவேண்டும்.
கொவிட்-19 தொற்றில் இருந்து நிலையான மீட்சி அடைவதை உறுதிப்படுத்தும் வகையில், எல்லைக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்துவதற்கான விவரங்களை முடிவு செய்ய கொஞ்ச கால அவகாசம் தேவை என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
கொவிட்-19 பரிசோதனை, இல்லத் தனிமை ஆகிய கட்டுப்பாடுகள் இல்லாமல் சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அதேபோல மலேசியர்களுக்கும் பரஸ்பர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றும் மலேசியா கூறி இருந்தது.
சிங்கப்பூரும் புருணையும் பச்சை மண்டலங்களாக மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதால் புதிய ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
ஊடகங்கள் இது பற்றி கேட்டதற்கு சிங்கப்பூர் அமைச்சின் பேச்சாளர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.

