வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்திய நிறுவனங்கள் நன்கொடை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்திய நிறுவனங்கள் நன்கொடை

2 mins read
0280ebb0-7ab9-46b0-91e0-b622bc285d8f
வேலையிடங்கள் தவிர, ஊழியர்கள் வேறு இடங்களுக்குச் சென்றால் அது சமூகத்தில் கிருமிப் பரவலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தால் இங்கு பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தோள் கொடுத்துள்ளது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (CII-IBF). அந்த அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களின் உதவி நிதிக்காக வெளிநாட்டு ஊழியர் நிலையத்திற்கு $159,000 நிதி திரட்டியுள்ளது.

இந்த நிதி திரட்டு முயற்சிக்கு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. 'ஸூம்' எனும் மெய்நிகர் சந்திப்புத் தளம் வாயிலாக இந்த நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் $159,000க்கான மெய்நிகர் காசோலையும் வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலக அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா இதில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் இடம்பெறும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய அமைச்சர் இந்திராணி, கூட்டமைப்பின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவதில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கும் என்றார். மேலும், இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்குவதிலும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மின்னிலக்க உத்திகளை கற்றுத் தருவது போன்ற சமூக தொண்டூழிய முயற்சிகளிலும் தங்களது பங்கை ஆற்றலாம் என அவர் கூறினார்.

"இங்குள்ள தங்கும் விடுதிகளில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிகப்பட்டவர்களில் 35% இந்திய ஊழியர்கள். வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்," என்று தெரிவித்தார் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு ஜாவத் அ‌ஷ்ரஃப். கூட்டமைப்பில் இடம்பெறும் இந்திய நிறுவனங்கள் தாயகத்தில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்நிறுவனங்கள் பங்களிக்க முன்வந்துள்ளது மனதை நெகிழ வைக்கிறது என்றார் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.ராவ். வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள உதவி, உணவு, தங்குமிட வசதி போன்ற இதர செலவுகளுக்கு இந்த நன்கொடை உதவும்.