'பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது'

'பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது'

2 mins read
87b255de-659b-478f-a828-7fc14f7e2b1b
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங். கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூரின் சுயாதிபத்திய உரிமைகளில் பாட்டாளிக் கட்சி கடப்பாடு கொண்டிருக்கிறது என்பதை அந்தக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் மறுஉறுதிப்படுத்தி இருக்கிறார் என்றும் இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறினார்.

வெளியுறவு என்று வரும்போது அரசாங்கத்துடன் பாட்டாளிக் கட்சி தொடர்ந்து தோள் கொடுத்து நிற்கும் என்று திரு பிரித்தம் சிங் தெரிவித்து இருப்பது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங் கொண்டிருந்த அதே நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது என்றார் திரு சண்முகம்.

கவிஞரும் நாடக ஆசிரியருமான ஆல்ஃபியான் சையது மலேசியா, சிங்கப்பூர் பற்றி தெரிவித்த கருத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரித்தம் சிங் இன்னமும் நம்புகிறாரா என்றும் அமைச்சர் சண்முகம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நான்காவது வரவுசெலவுத் திட்டம் தாக்கலானபோது அந்தக் கவிஞரை ஆதரித்து பிரித்தம் சிங் பேசினார். இதை மக்கள் செயல் கட்சியின் இணையத்தளத்தில் சென்ற வெள்ளிக்கிழமை வெளியான ஒரு கட்டுரையில் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டான் உ மெங் குறைகூறினார்.

அந்தக் கவிஞரின் பல ஃபேஸ்புக் பதிவுகளைச் சுட்டிக்காட்டிய ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர், அந்தப் பதிவுகள், சிங்கப்பூரைவிட மலேசியாவுக்கு அந்தக் கவிஞர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைப் புலப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் சண்முகம் கருத்து கூறினார்.

கவிஞரின் ஃபேஸ்புக் பதிவுகள் பற்றி பிரித்தம் சிங்கிற்குத் தெரியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு டான் எழுப்பிய கேள்வி சரியான, பொருத்தமான கேள்விதான் என்று சண்முகம் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் பதிலளித்த பிரித்தம் சிங், வெளியுறவுகளைப் பொறுத்தவரையில், பாட்டாளிக் கட்சி சிங்கப்பூருக்குத் தோள் கொடுத்து வந்திருக்கிறது. தொடர்ந்து அது அவ்வாறே செய்யும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், அந்தக் கவிஞர் மலேசியா, சிங்கப்பூர் பற்றி தெரிவித்த கருத்துகள் ஆதரவு அளிக்க தக்கவைதான் என்று இன்னமும் பிரித்தம் சிங் நம்புகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அந்தக் கவிஞர் கூறியிருப்பவை தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தம் சிங் அவசரம் காட்ட வேண்டியதில்லை என்றும் ஒரு நல்ல நேரத்தில் அவரிடம் இருந்து கருத்துகளைப் பெறலாம் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.