சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 3 ஆண்களும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்காட்ஸ் ரோடு, பாலஸ்டியர் ரோடு, மெக்கன்சி ரோடு, சிலிகி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக மற்றும் தனியார் குடியிருப்புப் பகுதிகளில் ஜூன் 12 முதல் 19ஆம் தேதி வரை போலிஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனை மேற்கொண்டது. அப்போது கைது செய்யப்பட்டவர்களில் 18 முதல் 38 வரையிலான 11 பெண்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் 29 வயது பெண் மட்டும் குடியுரிமைச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவும் கைதுசெய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. 37 வயதுடைய ஆடவர், அரசாங்க ஊழியரைக் கடமை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காகவும் கைதாகினர்.
25, 31 வயதுகளுடைய ஆடவர்கள் இருவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைதாகினர்.
அத்துடன் உரிமம் பெறாத உடற்பிடிப்பு நிலையத்தின் உரிமையாளர் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலிஸ் தனது அறிக்கை ஒன்றில் கூறியது.
போலிசின் இந்த அதிரடிச் சோதனையின்போது அங்கிருந்த 25 மற்றும் 66 வயதுகளுடைய ஆடவர்களும் பிடிபட்டனர். அவர்கள் இருவரும், கொவிட்-19 கிருமித் தொற்று பரவலைத் தடுக்க நடப்பில் இருந்த அதிரடி நடவடிக்கையை மீறியுள்ளனர். அத்தியாவசியத் தேவையின்றி அவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்காததால் அவர்களுக்கு போலிஸ் தலா $300 அபராதம் விதித்தது.
குடியிருப்புப் பேட்டைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் பாலியல் சேவைகள் குறித்து அவர்கள் இணையத்தில் விளம்பரம் செய்வதாகவும் போலிஸ் கூறியது.
வீடுகளில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்பாடுகள் நடக்காமல் இருப்பதை வீட்டு உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். வாடகைக்கு இருப்போரின் செயல்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் வீட்டு உரிமையாளர்கள் விழிப்புடன் இருந்து சட்டவிரோதச் செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் தெரிந்தே இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் $3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

