எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் சிங்கப்பூரர்களின் மனதில் வாழ்வாதாரம், கொவிட்-19 ஆகியவை நிற்கும். எனவே, பிரசாரங்களின்போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் இந்த விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நேற்று பேட்டியளித்த அவர், புதிய கொவிட்-19 அலையைத் தவிர்ப்பதற்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புவர் என்று சொன்னார்.
மேலும், கிருமித்தொற்று சூழலுக்குப் பிறகு பொருளியல் மீட்சி அடைவதை எப்படி உறுதி செய்வது என்பது பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள விரும்புவர் என்றும் அவர் கூறினார்.
கிருமித்தொற்று சூழலால் உலகம் முழுவதும் பல நாடுகள் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டிய திரு சண்முகம், சமுதாயத்தின் பிளவுபடுத்துவதற்கான சக்தியையும் ஆற்றலையும் கிருமித்தொற்று சூழல் கொண்டிருப்பதாகக் கூறினார்.
நாட்டின் பொருளியல் குறித்து சிங்கப்பூரர்கள் கடுமையாக சிந்திக்கும் ஒரு சூழலை கொவிட்-19 ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களது வேலை, தங்களது பிள்ளைகளின் வேலை போன்று நேரடியாக பாதிக்கக்கூடிய அம்சங்கள் குறித்து மக்கள் அதிகம் சிந்திப்பதாக அவர் சொன்னார்.
நாட்டின் பொருளியலை மீட்கும் அதேவேளையில், இரண்டாவது கிருமித்தொற்று அலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் எப்படி சமநிலை காணும் என்பது பற்றியும் சிங்கப்பூரர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் திரு சண்முகம் கூறினார்.
மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க அரசாங்கம் நான்கு வரவுசெலவுத் திட்டங்களை வெளியிட்டிருந்தாலும், நிறுவனங்கள் தாக்குப்பிடிப்பதற்கு இவை மட்டும் போதாது என்பது சிங்கப்பூரர்களுக்குத் தெரியும் என்றார் அவர்.
"இந்தக் காலக்கட்டத்தில் மக்களை வழிநடத்த யாரால் முடியும்? நிறுவனங்கள் தாக்குப்பிடிப்பதை யாரால் உறுதிசெய்ய முடியும்? மக்களின் வேலை தொடர்வதை யாரால் உறுதிசெய்ய முடியும்?
"இதுபோன்ற பல கேள்விகள் மக்களின் மனதில் உள்ளன. கொவிட்-19 சூழல் தொடங்கியது முதல் இந்த விவகாரங்களில்தான் எங்களது கவனமும் உள்ளது.
"தேர்தல் பிரசாரங்களின்போது இந்த விவகாரங்கள் குறித்து வாக்காளர்கள் தெரிந்துகொள்ள விரும்புவர்," என்றார் திரு சண்முகம்.

