தெம்பனிசை சுற்றுச்சூழல் நகராக உருமாற்றுவதற்கான திட்டங்கள் வரையப்பட்டு வருவதாகவும் நடப்பிலும் முடிக்கப்பட்டும் சில திட்டங்கள் இருப்பதாகவும் தெம்பனிஸ் நகர மன்றம் தெரிவித்து உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட பின்னர், இவ்வட்டாரம் முழுவதையும் குடியிருப்பாளர்கள் எளிதாக சுற்றி வரமுடியும். அதற்கேற்ற வகையில் நடைபாதைகள் அகலப்படுத்தப்பட்டு அதிகமான சைக்கிளோட்டப் பாதைகள் அமைக்கப்படும் என்றும் நகர மன்றம் கூறியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் புதிதாக பூங்கா ஒன்றும் கட்டப்பட இருப்பதால் அப்பகுதி மக்கள் மேலும் அதிகமான பசுமைச் சூழலை அனுபவிக்கலாம். பல மாடி கார் நிறுத்துமிடங்களின் உச்சி போன்ற இடங்களில் இயற்கை வளங்கள் சேர்க்கப்படும்.
ஐந்தாண்டு பெருந்திட்டங்களை ஆகக் கடைசியாக அறிவித்திருக்கும் நகர மன்றம் தெம்பனிஸ். மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுயி தலைமையில் இயங்குகிறது இந்நகர மன்றம். மேலும் சில மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருக்கும் பேட்டைகளில் கடந்த வாரம் இதேபோன்ற ஐந்தாண்டு பெருந்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தஞ்சோங் பகார் குழுத் தொகுதி, ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர்கள்.
தெம்பனிஸ் நகர மன்றம் நேற்று விடுத்த அறிக்கையில் தனது ஐந்தாண்டுத் திட்டங்களை மார்ச் மாதம் தொடங்க இருந்ததாகவும் கொவிட்-19 சூழல் காரணமாக அந்நிகழ்வு சமூக ஊடகங்கள் உள்ளிட்ட மின்னிலக்கத் தளங்களில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. வழக்கமான பேட்டை மேம்பாடுகளுடன் பெரிய அளிவிலான, நகர விரிவாக்கத் திட்டங்களையும் தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

