சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மேலும் ஆறு வேட்பாளர்கள் அறிமுகம்; 9 தொகுதிகளில் போட்டி

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மேலும் ஆறு வேட்பாளர்கள் அறிமுகம்; 9 தொகுதிகளில் போட்டி

3 mins read
028ce7ba-7866-4b7e-b73b-0ce407bb0101
(மேல், இடமிருந்து) திரு சூ ஷோன் மிங், டாக்டர் டான் மெங் வா, திரு அபாஸ் கஸ்மானி, திருவாட்டி கெய்லா லோ, திரு ஹரிஷ் பிள்ளை, ஆங் யோங் குவான். படம்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி -

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அறிவித்துள்ளது. அவற்றில் போட்டியிட 24 வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் அது கூறியது.

இதற்கு முன் அக்கட்சி 44 வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை பின்னர் 29க்குக் குறைக்கப்பட்டு இப்போது 24 ஆகியுள்ளது.

மற்ற கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு இந்த எண்ணிக்கை எடுக்கப்பட்டது என்றும் இதன் மூலம் முடிந்தவரை மும்முனை போட்டியைத் தவிர்க்க முடியும் என்றும் அக்கட்சி விவரித்தது.

'ஸூம்' மெய்நிகர் கூட்டம் மூலம் நேற்று பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக், "ஐந்து உறுப்பினர் கொண்ட வெஸ்ட் கோஸ்ட், தஞ்சோங் பகார் குழுத் தொகுதிகளிலும் நான்கு உறுப்பினர் கொண்ட சுவா சூ காங் குழுத் தொகுதியிலும், ஹோங் கா நார்த், பைனியர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேரிமவுண்ட், இயோ சூ காங், கெபுன் பாரு தனித் தொகுதிகளிலும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்," என்றார்.

ஐந்து உறுப்பினர் கொண்ட நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடுவது பற்றி அக்கட்சி எதுவும் சொல்லவில்லை என்றாலும் அதன் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சொங் பாங் தொகுதியில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தனர்.

பின்னர் அவர்கள் அக்குழுத் தொகுதியில் போட்டியிடுவது பற்றி முன்னர் பரிசீலிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

"மேற்குப் பகுதியில் பல ஆண்டுகளாக நான் மருத்துவராகப் பணியாற்றினேன். மேலும் ஆயர் ராஜா தொகுதியில் பல்லாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆகவே, மேற்குப் பகுதியில்தான் எங்கள் கட்சி அதிகம் கவனம் செலுத்தும்.

"இருப்பினும், வேட்புமனு தாக்கல் தினத்தில் மாற்றங்கள் நிகழக்கூடும். நாங்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம்," என்றும் டாக்டர் டான் கூறினார்.

தேர்தல் களத்தில் குதிக்கும் மேலும் ஆறு வேட்பாளர்களை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நேற்று பட்டியலிட்டது. அவர்களில் ஐவர் புதியவர்கள்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 23 வயது மாணவரான திரு சூ ஷோன் மிங், கொள்கை ஆய்வுக் கழகத்தின் முன்னாள் ஆய்வாளரான 57 வயது டாக்டர் டான் மெங் வா, வர்த்தக ஆலோசகரும் மூத்த பயிற்றுவிப்பாளருமான 67 வயது திரு அபாஸ் கஸ்மானி, பட்டயக் கணக்காளரும் 11 நிறுவனங்கள் கொண்ட குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரியுமான 43 வயது திருவாட்டி கெய்லா லோ, சமூக கட்டட வடிவமைப்பு மற்றும் தலைமைத்துவ நிறுவனத்தின் உலகளாவிய தலைவரான 60 வயது திரு ஹரிஷ் பிள்ளை, மனநல மருத்துவரான 65 வயது டாக்டர் ஆங் யோங் குவான் ஆகியோரே அந்த அறுவர்.

இதற்கிடையே, கடந்த ஞாயிறன்று புக்கிட் பாத்தோக்கில் தொகுதி உலா மேற்கொண்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறி உள்ளது. தொகுதி உலாவின்போது சமூக இடைவெளியை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து வாரியம் இதனைத் தெரிவித்தது.

அந்த அரசியல் கட்சியைத் தான் தொடர்புகொண்டதாகக் குறிப்பிட்ட வாரியம், குழுவினரின் எண்ணிக்கையை ஐந்துக்குள் வைத்துக் கொள்ளுமாறும் ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் அப்போது அவர்களிடம் எடுத்துச் சொன்னதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.