சிங்கப்பூரின் நாடளாவிய இரண்டு 5ஜி கட்டமைப்புகளுக்கும் சுவீடன் தொழில்நுட்ப நிறுவனமான எரிக்ச னும் ஃபின்லாந்தின் நோக்கியாவும் அடிப்படை வசதிகளை வழங்கும்.
இவை சிங்டெல்லுக்கும் ஸ்டார் ஹப்-எம்1 கூட்டு அமைப்புக்கும் முக்கிய விற்பனையாளர்களாக இருக்கும். இறுதி உரிமத்தைப் பெற்ற சிங்கப்பூரின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதனை நேற்று தெரிவித்தன.
இத்தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டுக்குள் 5ஜி இணையச் சேவைகளை வழங்கும் ஏற்பாடுகளில் ஈடுபட உள்ளன.
இதன் மூலம் மின்னிலக்கப் பொருளியலுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். எதிர்காலத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களையும் இயந்திர மனிதர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களை இயக்கவும் 5ஜி கட்டமைப்பு மூலம் சாத்தியப்படும். அப்படியொரு காலகட்டத்தை சிங்கப்பூர் நெருங்கிச் செல்ல உலகத் தரத்திலான இணையக் கட்டமைப்பு கைகொடுக்கும்.
நாடளாவிய 5ஜி உரிமத்தைப் பெறத் தவறினாலும் சிறிய அளவிலான கட்டமைப்பை டிபிஜி டெலிகாம் கொண்டிருக்கும். அந்நிறுவனத்திற்கான தொழில்நுட்பத்தை சீனாவின் ஹுவாவெய் வழங்கும். தீவு முழுமைக்குமான 3.5ஜிகாஹெர்ட்ஸ் வானலையின் பற்றாக்குறை காரணமாக இரண்டு கட்டமைப்புகளை மட்டுமே இங்கு ஏற்படுத்த முடியும்.
இந்த வானலையை மலேசியா போன்ற நாடுகள் செயற்கைக்கோள் தொடர்புகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த ஆண்டுவாக்கில் அது சிங்கப்பூர் முழுமைக்கும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். சிங்டெல் நிறுவனத்துக்கான எல்லா வகை கட்டமைப்பு பாகங்களையும் எரிக்சன் வழங்கும்.
அதே நேரம் நோக்கியா நிறுவனம் ஸ்டார்ஹப்-எம்1 கூட்டு அமைப்புக்குத் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ரேடியோ கட்டமைப்பு தொடர்பு சாதனங்களை வழங்கும்.