பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றி முன்னுதாரணமாக திகழ்க

2 mins read
4cfa9dcb-b53b-42b8-89c3-88084ec17475
படம்: கோப்புப்படம், எஸ்டி -

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் வாக்காளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவதுடன் தங்களது வாக்காளர்களையும் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தும்படி தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அளவுகடந்த ஆர்வத்தால் ஒன்றுதிரளும் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், பிரசாரத்தில் இறங்குபவர்கள் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அந்த இடத்திலிருந்து அகன்று செல்லலாம் என்று தேர்தல் துறை ஆலோசனை வழங்கியது.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020 சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தேர்தல் துறை, தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு விவரித்தது.

வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியைக் கட்டிக்காப்பது, பிரசார நடைகளுக்காக அதிகபட்சமாக ஐந்து பேர் கொண்ட குழுக்களில் செல்வது போன்ற விதிமுறைகளைத் தவிர கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான வேறு சில வழிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டது.

உணவங்காடிகளில் சாப்பிடுதல், பானம் அருந்துதல் போன்ற நேரங்கள் தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும் வேட்பாளர்கள் முகக்கவசங்களை அணியவேண்டும்.

எச்சில் துளிகளின் வழியாக கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க முகக்கவசங்களை அணியாத நேரங்களில் அவர்கள் பேசுவதை முடிந்தவரை குறைக்கவேண்டும்.

புகைப்படம் எடுக்கவோ பேசுவதற்காகவோ வேட்பாளர்கள் தங்களது முகக்கவசங்களைக் கழற்றக்கூடாது.

கைக்குலுக்கல் போன்ற நேரடித் தொடர்பு முறைகளின்வழி பொதுமக்களைத் தொடுவதை வேட்பாளர்களும் கட்சித் தொண்டர்களும் தவிர்க்கவேண்டும்.

தொலைக்காட்சி, மின்னிலக்க ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் காணொளிப் பதிவுகளிலும் வேட்பாளர்கள் முகக்கவசங்களை அணிவது உன்னதம் என்று தேர்தல் துறை கூறியது.

"பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது அல்லது ஏனைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும் சில சூழல்களில் இவ்வாறு செய்வது சிறந்தது," என்றும் அது குறிப்பிட்டது.

முகக்கவசங்களைத் தொலைப்பது அல்லது மறதியால் கொண்டுசெல்லாமல் இருப்பது போன்றவை பொது இடத்தில் முகக்கவசங்களை அணியாமல் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் அல்ல என்று கூறிய தேர்தல் துறை, வேட்பாளர்கள் கூடுதல் முகக்கவங்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றது.

பொதுமக்களும் தங்களது பங்கை ஆற்றுமாறும் தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் நிலையங்களின் சுற்றுவளாகத்தில் கூடுவதை அல்லது சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.

வேட்பு மனுத்தாக்கல் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும். மனுத்தாக்கல்கள் அனைத்தும் நண்பகல் 12 மணிக்குள் செய்யப்படவேண்டும்.