அமைச்சர்: சமூக இடைவெளி மிகமுக்கியம்

2 mins read
5dc8099f-c646-45ce-a227-8b851502d378
மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் , விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களை மூடிவிட அரசாங்கம் தயங்காது என்று அவர் எச்சரித்தார். படம்: எஸ்டி -

நிறுவனங்கள் சமூக இடைவெளி நியதியை மிக முக்கியமானதாகக் கருதவேண்டும். இல்லை என்றால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் எச்சரித்து இருக்கிறார்.

அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை என்றால் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைகூட ஏற்படலாம் என்றார் அவர்.

காணொளி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு வோங், விதிமீறல் இருந்தால் நிறுவனங்களை மூடிவிட அரசாங்கம் தயங்காது என்று அவர் எச்சரித்தார்.

கொவிட்-19 கிருமியைக் கையாளுவதற்கு அமைக்கப்பட்ட அமைச்சுகள் நிலை சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், இன்னமும் சில நிறுவனங்கள் விதிகளை மீறி நடந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

அந்த விதியை மிக முக்கியமானதாகக் கருத வேண்டும் என்பதை எல்லா நிறுவனங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

சிங்கப்பூரின் பொருளியல் இரண்டாம் கட்டமாகத் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. ஜூன் 19 முதல் மேலும் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணவும் அனுமதி கிடைத்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் முன்பைவிட அதிக மக்கள் இப்போது வீட்டைவிட்டு வெளியே சென்று வருகிறார்கள்.

"எல்லாவற்றையும் கண்காணித்து வருகிறோம். அமலாக்க நடவடிக்கைகளில் மிகவும் விழிப்பு நிலையில் இருந்து வருவோம்.

"விதிமீறல்கள் காணப்பட்டால் உடனடியாக அவற்றைச் சரிப்படுத்த நேரடியாக முயல்வோம்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"சிறிய அளவிலான விதிமீறல் என்றால் அதைச் சரிப்படுத்த நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

"பெரிய அளவில் விதிமீறல் இடம்பெற்று இருந்தால் அந்தத் தவற்றைச் செய்யும் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும்.

"முறையான பாதுகாப்பு நியதிகளை நடைமுறைப்படுத்தினால்தான் மறுபடியும் அவை செயல்பட முடியும்," என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார்.