குடியிருப்பாளர்களுக்கு தகுந்த உதவி கிடைத்துள்ளது

குடியிருப்பாளர்களுக்கு தகுந்த உதவி கிடைத்துள்ளது

2 mins read
b5f5658f-150c-4923-adb9-10cd165d7a73
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் திருவாட்டி ஃபூ மீ ஹார் ஆகியோர் நேற்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் தேெபான் கார்டன்ஸ் சந்தை, உணவங்காடியை வலம் வந்து குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரவுசெலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஆதரவு நடவடிக்கைகள், ஊழியர்கள் தங்களின் வேலைகளைத் தற்காத்துக் கொள்ளவும் இக்காலகட்டத்தைக் கடந்து வரவும் பெரிதும் உதவியுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று கூறினார்.

"இவை குடியிருப்பாளர்களுக்கு அதிகம் கைகொடுத்துள்ளன. இன்னும் வேறு என்னென்ன செய்யலாம் என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கிடைத்த உதவி போதுமானதா என்று அவர்களை நான் கேட்கும்போது ஆமாம் என்கிறார்கள். அவர்களுக்குத் திட்டங்களின் பலன் தெரிவதாகக் கூறுகிறார்கள்," என்றார் திரு ஹெங்.

நிதி அமைச்சராகவும் உள்ள திரு ஹெங், நேற்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ள தேபான் கார்டன்ஸ் சந்தை மற்றும் உணவங்காடியை வலம் வந்து உணவுக்கடைக்காரர்களையும் குடியிருப்பாளர்களையும் சந்தித்துப் பேசினார்.

நடப்புக்குக் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஆதரவு நடவடிக்கைகள் திட்டமிட்ட பலனை அளிக்கின்றனவா என்பதை அறிந்திடவே தாம் குடியிருப்பாளர்களைச் சந்தித்ததாக திரு ஹெங் கூறினார்.

நிதி ஆதரவு உதவியிருப்பதாக பல உணவுக்கடைக்காரர்களும் ஊழியர்களும் தம்மிடம் தெரிவித்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்பாக சிங்கப்பூர்வாசியான பெரியவர்களுக்கு வழங்கப்பட்ட $600 மதிப்புள்ள ஒற்றுமைக்கான வழங்குதொகை உதவியாக இருந்ததாகப் பலர் தம்மிடம் கூறியதாகவும் திரு ஹெங் பகிர்ந்துகொண்டார்.

அரசாங்கம் இவ்வாண்டு அறிவித்த நான்கு வரவுசெலவுத் திட்டங்களும் சுமார் $93 பில்லியன் நிதியுதவியை வழங்குகின்றன. இவற்றின் வழி கொவிட்-19 சூழலால் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருக்குத் தகுந்த உதவி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

"கொவிட்-19 நெருக்கடி உருவாக்கியுள்ள புதிய சூழலுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் ஆதரவு தந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு மேம்பட்டுள்ளது," என்றார் திரு ஹெங்.

கிருமி முறியடிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பல நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியிருந்தாலும் இன்னும் உலகநாடுகளை கொவிட்-19 தொற்றுநோய் வாட்டுவதாக திரு ஹெங் எச்சரித்தார். மீண்டும் இரண்டாவது கிருமி அலைகள் சில நாடுகளை நெருக்குவதாகவும் அவர் சொன்னார்.

அவருடன் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களான தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் திருவாட்டி ஃபூ மீ ஹார் ஆகியோரும் இருந்தனர்.

இதற்கிடையே, வரும் பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் டாக்டர் டான் செங் போக் தலைமையில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்டபோது கடந்த ஆண்டுகளில் அக்குழுத்தொகுதியில் மற்ற கட்சிகள் நின்றதுண்டு என்று திரு ஈஸ்வரன் பதிலளித்தார்.

"நாங்கள் கூற விரும்பும் செய்தியும் எங்களின் நிலைப்பாடும் என்றும் மாறாது. எங்களின் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்களின் குறி," என்றார் அவர்.

2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குப் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சிக் குழு 78.57% வாக்குகளை வென்றது.