வாக்குப்பதிவு நாளில் அடையாள அட்டைக்குப் பதிலாக சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை நேற்று தெரிவித்தது.
அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறுவதாகச் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது முதல், குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்திற்குப் பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
அடையாள அட்டையை மாற்றுவது, அதைப் பெறுவது, அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அறியப்படுகிறது. வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி, வாக்காளர் பதிவேட்டைத் தயாரிப்பதற்கான இறுதி நாளான மார்ச் 1ஆம் தேதி வரையிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
அந்தத் தேதியன்று பதிவு செய்யப்பட்டிருந்த முகவரிகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் என்று தேர்தல் துறை விளக்கமளித்தது.
தேர்தல் துறையின் இணையத்தளத்தின்படி, சீருடை அதிகாரிகளின் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வழங்கிய அடையாள அட்டைகளும் அனுமதிக்கப்படுகின்றன.
வாக்காளர் தனது பாஸ்போர்ட்டைக் கொண்டுவந்தால், தேர்தல் அதிகாரி அவரது அடையாள அட்டை எண்ணை மின் பதிவு முறையில் பதிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

