மரண வாயிலை சிலமுறை எட்டிப் பார்த்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கொவிட்-19லிருந்து விடுபட்டிருக்கிறார் சிங்கப்பூரின் 42வது கொவிட்-19 சம்பவம் என்று பலராலும் அறியப்படும் பங்ளாதேஷ் ஊழியர் திரு ராஜு சர்கார்.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அந்த 39 வயது ஊழியர், 24 கிலோ எடை குறைந்து காணப்பட்டார். மருத்துவமனை ஊழியர்களிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்ற திரு ராஜு, கொஞ்சம் இறைச்சிக் குழம்பு சாப்பிட விரும்புவதாகக் கூறினார்.
பிப்ரவரி மாதம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், மே மாத மத்தியில் டான் டோக் செங் மருத்துவமனையின் மறுவாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
வெகுநாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் நோயிலிருந்து மீண்டு வந்த திரு ராஜுவின் மன உறுதி மருத்துவர்களையே வியக்க வைத்ததாக டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் பெஞ்சமின் ஹோ கூறினார்.
முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சேகர் மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தார் எனவும் இரண்டு, மூன்று தடவைகள் மரண வாயிலை எட்டிப் பார்த்தார் என்றும் அவர் கூறினார்.
ராஜு குணமடைவதற்கு தம் குடும்பத்தின் மீது அவர் கொண்டிருந்த பாசம்தான் பெரும் சக்தியாக இருந்தது. கைபேசி வழி குடும்பத்தாரின் புகைப்படத்தைப் பார்த்தும், உரையாடியும் வந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, மார்ச் 30ஆம் தேதி அவருக்கு மகன் பிறந்தான்.
கொவிட்-19 அவருக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உடலில் உப்பு, மெக்னீசியம் போன்றவற்றின் அளவு வெகுவாகக் குறைந்திருப்பதால் இதயத்தின் செயல்பாடு குறைந்துள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன் தைராய்டு, சிறுநீரகப் பிரச்சினையும் உள்ளது. தற்காலிகமாக அவர் ரத்தசுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டியிருந்தது.
தற்போது 60 நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ள அவர் வேலை செய்யக்கூடிய நிலைக்கு வந்ததும் அவரது முதலாளியிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தாயகம் திரும்பி, மனைவியையும் மகனையும் பார்க்க விரும்பும் திரு ராஜு, "அதற்கு இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம்," என்று நம்பிக்கையுடன் கூறினார்.

