பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்காததன் தொடர்பில் அமொய் ஸ்திரீட்டில் உள்ள இரு உணவு, பான வர்த்தகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் உடனே மூடவும் உத்தரவு இடப்பட்டது.
அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையிட்டதில் இரவு 10.30 மணிக்குப் பிறகும் 'ஈட்டரி சிக்கோ லொக்கோ' மற்றும் அதன் பக்கத்தில் அமைந்திருக்கும் 'மூன்ஸ்டோன் பார்' ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு மது அருந்த இடமளித்திருந்தன.
இரண்டு உணவு வர்த்தகங்களுக்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து வெளியிடங்களில் உட்கார்ந்து உணவு சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டாலும் கூட்டத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்ற கட்டுப்பாடும் வேறு பட கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நடப்பில் உள்ளன.
உதாரணத்திற்கு இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானத்தை விற்கவோ குடிக்கவோ முடியாது. நேரடி இசைக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கும் அனுமதி இல்லை.
கிருமி முறியடிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து சுற்றுப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்படும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கழகம் தெரிவித்தது. பெரும்பாலான வர்த்தகங்கள் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த இரண்டாம் கட்டத் தளர்வு நிலையில் இதுவரை 19 நபர்களுக்குத் தலா $300 அபராதமும் வர்த்தகங்களுக்கு $1,000 முதல் $2,000 வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கழகம் கூறியது. குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்ற விதி மீறலுக்காக இந்த அபராதங்கள் பிறப்பிக்கப்பட்டன.
உள்ளூர் வர்த்தகங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க ஊக்குவித்தாலும் வாடிக்கையாளர்கள் சமூகப் பொறுப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கழகம் அறிவுறுத்தியது.

